‘பன்னீர்' ரோஜா மாலை.. கடுப்பான எடப்பாடி பழனிசாமி.. பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்தவர் மீதே ஆத்திரம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு மேடையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததால் கடுப்பான அவர், தனது ஆதரவாளரான பெஞ்சமினை கடிந்து கொண்டார்.
பேசிக் கொண்டிருக்கும்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் ரோஜா மாலை அணிவிக்க முயன்றதால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "அட இருங்கப்பா.. சும்மா" எனக் கடிந்துகொண்டார்.
பின்னர் மீண்டும், பெஞ்சமின் மாலை அணிவிக்க முயன்றபோதும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ஈ.பி.எஸ். இந்த பெஞ்சமின் தான் பொதுக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழுவில் பாதாம் கீர், ஜாங்கிரி.. 5 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து.. மெனு லிஸ்ட் இதோ!

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு பல்வேறு கூச்சல், குழப்பங்கள், நிர்வாகிகளின் இடையூறுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், அதிமுக அவைத் தலைவராக அ.தமிழ் மகன் உசேன் பொதுக்குழு, செயற்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய, ஜெயக்குமார் வழிமொழிந்தார்.

எடப்பாடிக்கு மாலை
அதிமுக அவைத் தலைவர் தேர்வு குறித்த தீர்மானத்தை வாசித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவராக அ.தமிழ்மகன் உசேன் பொதுக்குழு, செயற்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். அப்போது, அவரது ஆதரவாளரான பெஞ்சமின் பெரிய ரோஜா மாலையுடன் வந்து திடீரென எடப்பாடிக்கு மாலை அணிவித்தார்.

கடுப்பான ஈபிஎஸ்
பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென மாலை அணிவிக்கப்பட்டதால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "அட இருங்கப்பா.. சும்மா" என கோபமாக கடிந்துகொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் நின்ற கேபி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவிக்க முயன்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், பொதுக்குழு ஏற்பாட்டாளருமான பெஞ்சமினை அங்கிருந்து அனுப்பினர்.

பரபரப்பு
அதிமுக பொதுக்குழுவில், சிவி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுக்குழுவின் அத்தனை தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறியபோது தொண்டர்கள் கடுமையாக கூச்சலிட்டனர். எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மாலை அணிவித்து அவர் கடுப்பான சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் கோபமான எடப்பாடி
அதேபோல, எஸ்.பி.வேலுமணி பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் பெஞ்சமின் அதே ரோஜா மாலையுடன் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவிக்க முயன்றார். அதே 'பன்னீர்' ரோஜா மாலை மீண்டும் வந்ததால் கோபமான எடப்பாடி பழனிசாமி, மாலையை பறித்து அருகே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு, இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கும்போது மாலை போடுவதா எனக் கோபத்தோடு கத்தினார்.