சுக்குநூறா சிதறும்.. எடப்பாடியின் ஒரே முடிவுதான்.. 7 மாங்காய்கள்! பாஜக அவுட்.. ஈபிஎஸ் போடும் கணக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக மீது கடந்த 5 ஆண்டுகளாக வைக்கப்படும் விமர்சனங்களை ஒரே முடிவில் எடப்பாடி பழனிசாமி தூள் தூளாக்குவார், பல கட்சிகள் எடப்பாடி பழனிசாமியோடு கைகோர்க்கத் தயாராவர்கள், மெகா கூட்டணி அமையும் என்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் முட்டல் மோதலுக்கு மத்தியில், ஓபிஎஸ், பாஜகவுடன் இணக்கமாக இருந்து வருகிறார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்படுமாறு பாஜக தலைமை அறிவுறுத்தி வருவதால், பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் ஈபிஎஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அதிமுகவோடு கைகோர்க்கும் என்பது ஈபிஎஸ் போடும் கணக்காம்.

பாஜக உடனான கூட்டணி காரணமாகவே எதிர்த்த கட்சிகளின் விமர்சனங்கள் தூள் தூளாகும், ஜெயலலிதா கால அதிமுக போல எடப்பாடி தலைமையில் கட்சி வலுப்பெறும் எனப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

 அதிமுக மீதான குற்றச்சாட்டு

அதிமுக மீதான குற்றச்சாட்டு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்பட்டு வருவதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்து அதிமுக அகற்றப்பட்ட பின்னரும், பாஜகவின் தயவையே நாடி வருவதால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக பாஜகவுக்கு அடங்கிப்போகிறது அதிமுக என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிகாரப் போட்டியிலும், இருவரும் பாஜக தலைமையின் உதவியை நாடி வருவதும் விமர்சனங்குள்ளாகி வருகிறது.

 பாஜக கூட்டு

பாஜக கூட்டு

பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தது அதிமுக அரசு, ஆட்சியில் இருப்பதற்காக தமிழ்நாட்டு மக்களை பலிகொடுக்கவும் துணிந்தார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்த புகார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கும், 2021ல் ஆட்சியைப் பறிகொடுத்ததற்கும், பாஜகவுடனான கூட்டணியே பிரதான காரணம் என்று ஈபிஎஸ் அணியில் உள்ள தலைவர்களே கூட்டங்களில் பேசியதும் அரங்கேறியது.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு அளிப்பது போன்ற சூழல் தென்படுவதால், பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறவும் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, திமுக கூட்டணியில் உள்ள சில முக்கிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்க ஈபிஎஸ் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் வியூக வல்லுநராகச் செயல்பட்ட சுனில் மூலம் காங்கிரஸ் உடன் நெருக்கத்தை ஏற்படுத்தவும் ஈபிஎஸ் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

 பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில்

பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில்

பாஜகவை தவிர்த்துவிட்டு ஈபிஎஸ் அமைக்கும் கூட்டணியில் பாமக, தேமுதிக உடன் இணைந்தால், வாக்கு பலம் வெகுவாக அதிகரிக்கும் என்ற கணக்கும் இருக்கிறது. கடந்த தேர்தலின்போது, திமுக கூட்டணி கட்சிகள், பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையிலேயே, சீட் பேரங்களில் கூட பெரிதாக ஈடுபடாமல் திமுகவின் பக்கம் நின்றன. இந்த முறை, அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியோடு இணைவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் என்ற பாயிண்டும் இருக்கிறது.

 சிறுபான்மையினர் வாக்குகள்

சிறுபான்மையினர் வாக்குகள்


பாஜக கூட்டணியால் அதிமுக இழந்த சிறுபான்மையினர் வாக்குகள், திமுக அரசு மீது அதிருப்தியில் இருக்கும் வாக்குகள், அதிமுகவுக்கே விழ அதிக வாய்ப்பு உண்டு. பாஜக உடனான கூட்டணி காரணமாக அதிமுகவை விமர்சிப்பவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு நெருக்கடியாக மாறும். அப்படி பார்த்தால், எம்.பி தேர்தலில் சரிபாதி இடங்களை அதிமுக கைப்பற்றும் சூழல் ஏற்படும். அதிமுகவை பழையபடி, ஜெயலலிதா காலத்தில் எப்படி இருந்ததோ அந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்கிறார்கள்.

 தானாகவே பலமாக மாறுவார்

தானாகவே பலமாக மாறுவார்

அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் இருந்தால், அதிமுக தொண்டர்களாலேயே புறக்கணிக்கப்படுவார். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்வதற்கு எந்த அதிமுக தொண்டனும் விரும்பமாட்டான். தானாகவே, அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிப்பார்கள். ஓபிஎஸ் தனித்து விடப்படுவார், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான அதிமுக தானாகவே கட்டமைக்கப்படும் என்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

 விமர்சனங்கள் சுக்கு நூறாகும்

விமர்சனங்கள் சுக்கு நூறாகும்

பாஜக உடனான கூட்டணி காரணமாகவே அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்த கட்சிகளின் விமர்சனங்கள் சுக்கு நூறாகும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்து கொண்டிருந்த திமுகவின் வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகள் எடப்பாடி பழனிசாமி நோக்கித் திரும்பும். ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நாடாளுமன்றத் தேர்தலில், ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக எதிரொலிக்கும் என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

 7 டார்கெட்கள்

7 டார்கெட்கள்

பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற ஒரே முடிவின் மூலம் பல ஆதாயங்களை எடப்பாடி பழனிசாமி பெறுவார் என்கிறார்கள்.
1. ஓபிஎஸ் உடன் இணைய வேண்டும் என்ற நெருக்கடி இருக்காது. கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
2. பாஜக எதிர்ப்பு வாக்குகளில் ஒரு பகுதியை அறுவடை செய்யலாம்.
3. கடந்த தேர்தல்களில் இழந்த சிறுபான்மையினர் வாக்குகளை மீண்டும் அதிமுகவை நோக்கி திருப்பலாம்.
4. பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், திமுகவுக்கான வாக்குகளிலும் ஓட்டையைப் போடலாம்.

 வலிமையான தலைவர் பிம்பம்

வலிமையான தலைவர் பிம்பம்

5. பாஜக எதிர்ப்பு அடிப்படையில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஈபிஎஸ்ஸோடு இணையக்கூடும்.
6. பாஜகவை நேரடியாக எதிர்க்கத் தொடங்கினால், வலிமையான தலைவர் என்ற பிம்பம் உருவாகும். அது அரசியல் எதிர்காலத்திற்குப் பெருமளவில் பயன்படும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் உதவும்.
7. தமிழ்நாட்டில், பழையபடி திமுக vs அதிமுக என்ற திராவிடக் கட்சிகளுக்கு இடையேயான அரசியலாக நிலைமை மாறக்கூடும்.

 இதெல்லாம் நடக்குமா?

இதெல்லாம் நடக்குமா?

அதிமுக தனித்துப் போட்டியிடும் சக்தி வாய்ந்தது என எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் என பலரும் வெளிப்படையாகவே பேசி வந்தாலும், எடப்பாடியை பாஜக அப்படி இயங்க விட்டுவிடுமா என்ற கேள்வி எழுகிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை பாஜக அரசு தோண்டித் துருவுமே என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

 பாஜகவும் ரெடி ஆகிடுச்சுனா?

பாஜகவும் ரெடி ஆகிடுச்சுனா?

அதேசமயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் இருந்த வந்ததுமே 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயார் ஆகுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதை கவனித்துப் பார்த்தால், பாஜக தலைமையும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கக் கூடும் என்கிறார்கள். இதனால், பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+