மின்சார வாரியத்தின் ஷாக்.. எகிறும் "பீக் ஹவர்" கட்டணம்.. குறையுதா கரண்ட் பில்? கோட்டைக்கு போன லட்டர்
சென்னை: மாதாந்திர கட்டணத்தை இனி 17,200 ரூபாயாக செலுத்த வேண்டும் என அமல்படுத்தி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மின்சார உற்பத்தி மற்றும் பண வீக்கத்தின் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.. மேலும், ஒவ்வொரு வருடமும் 4.7 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

மின்கட்டணம்: இதையடுத்து, இந்த ஆண்டு தமிழகத்தில் வீடுகளுக்கு எந்தவித மின்கட்டணமும் உயர்த்தப்படாமல் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், மின் கட்டணத்திற்கான மானியம் வழங்கப்படாது என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாதாந்திர கட்டணத்தை இனி 17,200 ரூபாயாக செலுத்த வேண்டும் என அமல்படுத்தி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது என்றும், இந்த கட்டணத்தை ரத்த செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, அந்த அமைப்பின் தலைவர் ஜெயபால் அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லியிருப்பதாவது:
விசைத்தறிகள்: "நாட்டிலுள்ள 47 சதவீதம் மில்கள் தமிழகத்தில் இருக்கின்றன.. இங்குள்ள ஓ.இ.மில்களில் 1.8 கோடி ஸ்பிண்டில்களும் 13 லட்சம் ரோட்டார்களும் 2.37 கைத்தறிகளும் 6 லட்சம் விசைத்தறிகளும் 14 லட்சம் ஆட்டோ லூம்களும் உள்ளன...இவை ஏராளமான வேலை வாய்ப்பையும் மாநிலத்துக்கு அதிக வரி வருவாயையும் அளித்து வருகின்றன..
தமிழகத்தில் விளையும் பருத்தி ஐந்து சதவீதம் கூட இங்குள்ள மில்களுக்குப் போதுமானதாக இல்லை. இதனால் 95 சதவீதம் பிறமாநிலம் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தமிழக அரசுக்கு வரி வருவாயை அளித்து வருகின்றோம். மூலப்பொருள் 95 சதவீதம் பற்றாக்குறையிருந்தும் தொழில் முனைவோரின் முயற்சியால்தான் ஜவுளித்தொழிலில் தமிழகம் முதல் மாநிலமாகவுள்ளது.
சிறப்பு சலுகைகள்: ஆண்டுக்கு 300 லட்சம் பேல் பருத்தியை விளைவிக்கும் ராஜஸ்தான் பஞ்சாப் மஹாராஷ்டிரா குஜராத் தெலுங்கானா ஆந்திர மாநிலங்கள் 47 சதவீத கதிர் திறனுள்ள தமிழகத்தை சார்ந்தே விவசாயம் செய்கின்றன. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக அந்தந்த மாநிலங்களிலேயே மானியம் மற்றும் சிறப்புச் சலுகைகளை அளித்து மில்கள் துவங்க அந்த அரசுகள் ஊக்கப்படுத்துகின்றன.
இதனால் சர்வதேச நாடுகளுடன் போட்டி போடுவதை விட பிற மாநிலங்களுடன் போட்டி போட வேண்டிய நிலை தமிழக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிக வேலை வாய்ப்பையும் வருவாயையும் அளித்து வரும் இத்துறைக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டிய தமிழக அரசு மாறாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
மில் நடத்துவோர் சிறு முதலீட்டாளர்கள் என்பதை மறந்து நாளுக்கு 8 மணி நேரம் மில்லை இயக்கினால் கூடுதலாக 15 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இயக்கினாலும் இயக்காவிட்டாலும் முன்பு 3920 ரூபாயாக இருந்த மாதாந்திர கட்டணத்தை இனி 17,200 ரூபாயாக செலுத்த வேண்டும் என அமல்படுத்தி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.
கோரிக்கை: தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பையும் அதிக வரி வருவாயையும் கொடுத்து வரும் இத்துறைக்கு தமிழக அரசு சிறப்புச் சலுகை அளித்தால்தான் ஜவுளித்துறை மீண்டும் எழுச்சி பெறும். இல்லாவிடில் மின் வாரியம் இருக்கும், மில்கள் அழிந்து விடும். எனவே எல்டிசிடி நுகர்வோர்களுக்கு புதிதாக விதிக்கப்பட்ட பீக்ஹவர் சார்ஜையும் உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தையும் ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications