பத்திரம் இருந்தாலும் நிலம் சொந்தம் இல்லையா? சேமிப்பை காலி செய்யும் "குடிக்காணி".. ஹென்றி வார்னிங்
சென்னை: தமிழகத்தில் நிலம் வாங்கும் பொதுமக்கள் மத்தியில் நிலங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் முதலீடு செய்வது அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.. குறிப்பாக பட்டா மற்றும் சிட்டா போன்ற ஆவணங்களை தாண்டி நில உரிமை சார்ந்த நுணுக்கமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது பெரும் சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.. இதனை கருத்தில் கொண்டுதான், கடந்த 13 வருடங்களாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நிலம் தொடர்பான விழிப்புணர்வை டாக்டர் ஹென்றி ஏற்படுத்தி வருகிறார்..
தமிழகத்தில் நிலம் வாங்கும் பொதுமக்கள் மத்தியில் நிலங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்..

பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்று
நிலம் வாங்கும் போது பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வில்லங்கச் சான்று போன்ற ஆவணங்களை மட்டுமே மக்கள் சரிபார்க்கின்றனர்.. ஆனால் நில உரிமை சார்ந்து நிலவி வரும் பல்வேறு நுணுக்கமான சட்டச் சிக்கல்கள் குறித்து பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை..
இதனைத் தவிர்க்கும் பொருட்டு கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக ஃபெயிரா இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நிலம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை ஹென்றி தொடர்ந்து வழங்கி வருகிறார்.. அந்த வகையில் இன்று நில உரிமைகளில் ஒன்றான "குடிக்காணி பாத்தியம்" கொண்ட நிலங்களை வாங்கும் போது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்..
குடிக்காணி என்பது என்ன
குடிக்காணி என்பது ஜமீன்தார் மற்றும் நிலச்சுவான்தார் காலத்தில் உருவான ஒரு வகையான பாரம்பரிய வருவாய் பதிவு முறையாகும்.. அந்த காலத்தில் நிலத்தின் உரிமையாளர் வேறொருவராக இருந்தாலும், அந்த நிலத்தில் பல தலைமுறைகளாகக் குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்குச் சாகுபடி உரிமை அல்லது குத்தகை உரிமை வழங்கப்பட்டது.. இதுவே குடிக்காணி பாத்தியம் என அழைக்கப்படுகிறது.
மகாகவி பாரதியார் காலத்து இலக்கியங்களிலும் பழைய ஆவணங்களிலும் இச்சொல் பயன்பாட்டில் இருப்பதை நாம் காண முடியும்.. நாட்டு வழக்கில் இதனை மஞ்சட் காணி அல்லது காணியாட்சி என்றும் குறிப்பிடுவார்கள்.. இத்தகைய நிலங்களின் தனித்தன்மை என்னவென்றால், நிலத்தின் உரிமை ஒருவரிடம் இருக்கும் ஆனால் அந்த நிலத்தைப் பயன்படுத்தும் அல்லது அங்கு வசிக்கும் உரிமை இன்னொருவரிடம் இருக்கும்..
இத்தகைய சிக்கல் நிறைந்த நிலங்களை வாங்கும் போது முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என டாக்டர் ஹென்றி எச்சரிக்கிறார்.
நிலம் பத்திரம் இருந்தாலும் சொந்தமா
குறிப்பாக நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து நீங்கள் கிரையம் பெற்றாலும், அங்கு ஏற்கனவே குடியிருந்து வருபவர்கள் நிலத்தை விட்டு வெளியேற மறுக்கும் போது உடனடி அனுபவம் (Possession) கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்.. இது நீண்ட கால நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுப்பதோடு, வங்கி கடன் பெறுவதிலும் முட்டுக்கட்டையாக அமையும்.
ஏனெனில் நிலத்தின் உரிமையும் அனுபவமும் வெவ்வேறு நபர்களிடம் இருப்பதை வங்கிகள் விரும்புவதில்லை.. இதனால் பொதுமக்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் இத்தகைய சிக்கலான நிலங்களில் முடங்கிப் போகும் அபாயம் உள்ளது..
எனவே பொதுமக்கள் நிலம் வாங்குவதற்கு முன்னால் வருவாய் ஆவணங்களில் "குடிக்காணி" என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளதா என்பதை மிகக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
உரிமை விடுவிப்பு - குடிக்காணி பாத்தியம்
வெறும் ஆவணங்களை மட்டும் நம்பாமல் நிலத்திற்கு நேரில் சென்று அங்கு உண்மையில் யார் குடியிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்வது அவசியம்.. குடிக்காணி பாத்தியம் உள்ள நிலங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நிலம் தற்போது காலியாக இருக்கிறதா அல்லது அங்கு குடியிருப்பவர்களிடம் இருந்து முறையான "உரிமை விடுவிப்பு" (Release) ஆவணம் பெறப்பட்டுள்ளதா என்பதைச் சட்ட வல்லுநர்கள் மூலம் உறுதி செய்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.
விழிப்புணர்வுடன் கூடிய நில முதலீடே ஒருவரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று டாக்டர் ஹென்றி தனது விழிப்புணர்வு செய்தியில் டாக்டர் ஹென்றி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்..













Click it and Unblock the Notifications