முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கு உண்டு.. நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-ஆவது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

High Court

செனனை உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று தீர்ப்பில் கூறிய ஏழு முக்கிய அம்சங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

1. கேள்வி கேட்பதும், ஆட்சியாளர்களை விமர்சிப்பதும், கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுதுவதும் மக்களாட்சியில் மக்களின் அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-இன் படி கருத்து சுதந்திரம் என்பது அரசை பாராட்டுவதற்கு மட்டுமல்ல, விமர்சிப்பதற்கான அதிகாரம் தந்துள்ளது.

2. ஒரு அரசியல் கருத்து கடுமையாக உள்ளது. ஆட்சியாளர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்காக மட்டும் அதை குற்றமாக கருத முடியாது. கருத்து சுதந்திரத்துக்கு அரசியலமைப்பு 19(2)-இன் படி கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ஆனால், அதை பயன்படுத்தும் போதுமான குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளதா? என்பதையும் போலீசார் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் போன்ற காரணங்கள் இல்லாத நிலையில், அரசியல் விமர்சனத்துக்காக மட்டும் சட்டரீதியான நடவடிக்கைகளை போலீசார் எடுக்கக்கூடாது.

3. முதலமைச்சர் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அரசியல் தலைவர்களின் நற்பெயருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. ஆனால், அந்த பாதுகாப்பை பெற சட்டம் வகுத்துள்ள நடைமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும்.

4. ஆட்சியாளர்கள் நற்பெயருக்கான பாதுகாப்பு சட்டமும், குடிமக்களின் கருத்து சுதிந்திரத்தை பாதுகாக்கும் சட்டமும் ஒன்றுக்கொன்று முரணாக பயன்படுத்தப்படக் கூடாது. காவல்துறை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்பாக நடுநிலையோடு செயல்பட வேண்டியது அவசியம். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் அமைப்பாக காவல்துறை மாறிவிட கூடாது.

5. ஆளும்கட்சிக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும், ஆளும் கட்சியினர் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல்துறை மீதான நம்பிக்கையை பாதித்து விடும். ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக பொருளாதார நிபுணர் ஒருவரை காவல்துறை அதிகாலையில் கைது செய்துள்ளது. பின்னர் அந்த கருத்து அவருடையது இல்லை என தெரியவந்ததும் அவரை விடுவித்துள்ளனர்.

6. அவதூறான கருத்து பதிவிடப்பட்ட சமூக வலைதள கணக்கை சரிபார்க்காமல் காவல்துறை நடவடிக்கை எடுத்தது ஏன்? தவறாக செயல்பட்ட காவல்துறை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாதிக்கப்பட்டவர் பொருளாதார அறிஞராக இல்லாமல் ஒரு சாதாரண குடிமகனக இருந்தால் அவரது நிலைமை என்னவாகி இருக்கும்? புகழ்பெற்ற அறிஞர் என்பதற்காக மட்டுமே அவரது உரிமை பாதுகாக்கப்படக்கூடாது. சாதாரண குடிமகனுடைய உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

7. முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், போலீசுக்கும் உண்டு. ஆட்சி மாறலாம், முதலமைச்சர்கள் மாறலாம். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மட்டும் மாறாது" இவ்வாறு நீதிபதி என் ரமேஷ் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+