எங்களுக்கு ஒன்னுமே தெரியாதுணே! துண்டை மாற்றி போடும் 'மாஜிக்கள்!' எடப்பாடிக்கு பறந்த தூது? ஓகேதானாம்!
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கிவரும் நிலையில் சட்டபூர்வ அங்கீகாரம் அவருக்கே கிடைக்கும் என்பதால் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தாவ ட்டமிட்டு வருவதாகவும் அதற்கான தூது படலங்களை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுகவில் மோதல்
தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை தான் நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இரு அறிக்கைகள் வெளியிட்டார். இதேபோல எடப்பாடி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கியது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி கையே அதிமுகவில் தற்போது ஓங்கி இருக்கிறது. நான்கு மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தினாலும் அதில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட எதிர் தரப்பினரால் போட்டியிட முடியாது.

இபிஎஸ் திட்டம்
காரணம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்திருக்க வேண்டும் மற்றும் 10 மாவட்டச் செயலாளர்களின் கையெழுத்து உடன் முன்மொழியப்பட வேண்டும் என்பது குறித்த பொதுச்செயலாளர் தேர்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. மேலும் தற்போது ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே கிடையாது என்கின்றனர் இபிஎஸ் தரப்பினர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எடுத்து வருகிறது. தற்போது ஓபிஎஸ் அவரது மகன் ரவீந்திரநாத், வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் நீக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் கட்சியில் இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்து அனுப்புமாறு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவுறுத்தியுள்ளது.

பட்டியல் தயார்
அதன்படி கடந்த இரண்டு மாதங்களில் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள், ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும், கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அவமானப்படுத்தப்பட்ட போதும் அவருக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள், சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக பதிவிட்டவர்கள் என தீவிரமாக ஆராயப்பட்டு பட்டியல் தயாராகி வருகிறது. இந்த பட்டியில் விரைவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அவர்களையும் நீக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தாவ திட்டம்
இந்த நிலையில் தான் வேறு கட்சிகளில் சேர்ந்தால் போதிய செல்வாக்கு கிடைக்காது, ஓபிஎஸ் தரப்பில் இருப்பதும் தங்களுக்கு அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என உணர்ந்துள்ள சில நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே போய்விடலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர்களும் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தாவ திட்டமிட்டு வருகின்றனர். மேலும் ஓ.பன்னீர் செல்வத்துடனும் அவர்கள் தொடர்பை தவிர்த்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் சில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளாததால் ஓபிஎஸ் அதிர்ச்சிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

தூது படலம்
தற்போது கொரோனா தொற்று காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி தரப்புக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி தரப்புக்கு ஏற்கனவே தாவிய நிலையில் அவர்கள் மூலம் இந்த தூது படலம் தொடங்கி இருக்கிறது. இந்த பட்டியலில் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில மூத்த நிர்வாகிகளும் இனிமேல் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிர்வாகிகளும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தீவிர எதிர்பார்ப்பு
இதுகுறித்து தகவல் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு சென்றதாகவும் அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது. இதன் ஒரு பகுதியாகவே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்டு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற தகவலை கூறியிருக்கிறார். இது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளுக்கு சற்றே ஆறுதலான விஷயம் என பார்க்கப்படுகிறது. விரைவில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications