அசத்தல் சாதனை...கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் கீழ் கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர், நாகை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன.

இந்தக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சுமார் 3,645 வழித்தடங்களில் 1,257 நகரப் பேருந்துகள், 1,927 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணம் கோட்டத்திலிருந்து 5 மாவட்டங்களைப் பிரித்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் உருவாக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நிச்சயம் திருச்சிக்கென தனி கோட்டத்தைப் பெற்றுத் தருவார்கள் என நம்புகிறோம் என திருச்சிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துறை அதிகாரிகளோ,அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்கெனவே கடும் நிதிச்சுமையில் சிக்கித் திணறி வரும் நிலையில் புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டால் அதற்கான அலுவலகம், பணியாளர்கள், பராமரிப்பு உள்ளிட்டவற்றால் கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இதனால் வாய்ப்பு குறைவு என்றபோதிலும், கும்பகோணம் பெரிய கோட்டமாக இருப்பதால் அதை இரண்டாகப் பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அரசுதான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications