சாது மிரண்டால் காடு கொள்ளாது! என்ன ஒரு கோபம்! எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்த அமைச்சர் ராமச்சந்திரன்
சென்னை: தமிழக அமைச்சர்களிலேயே மிகவும் சாந்தமான மனிதர் என்ற பெயரெடுத்துள்ள வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்துள்ளார்.
அமைதியான மனிதரே கோபப்படும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அப்படி செய்து விட்டார் என்ற கேள்வி பலருக்கும் எழும்.
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களில் ஒரு பகுதியை வனத்துறைக்கு வழங்கிய விவகாரத்தில் எடப்பாடி விடுத்த ஒரு அறிக்கை தான் அமைச்சரை டென்ஷன் ஆகியிருக்கிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தேயிலை தோட்டக் கழகம்
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் நிர்வாக நலன் கருதி அந்தக் கழகத்தின் நிலங்களில் சில பகுதிகளை தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு வழங்கி சமீபத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டதை குறை கூறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இந்த கழகமானது தொடர் நஷ்டத்தை சந்திந்து வந்துள்ள நிலையில், அதனை சீர் செய்வதற்கான முயற்சிகளாக இந்த அரசு பொறுப்பேற்றவுடன் செய்து வருகிறது.

லால்பகதூர் சாஸ்திரி
இந்திய பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட 1964-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது அரசு தேயிலைத் தோட்டத் திட்டம். அதன்பிறகு இக்கழகம் 1975ஆம் ஆண்டு அரசு நிறுவனமாக மாற்றப்பட்டது.

12,000 தொழிலாளர்கள்
இந்நிறுவனத்தில் ஆரம்பத்தில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தற்போது கள மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களின் எண்ணிக்கை 3,850 மட்டுமே. தற்போது தேயிலைத் தோட்டக் கழகத்தின் பரப்பளவு 10,650 ஏக்கர் ஆகும். இந்நிறுவனம் தொடர்ந்து 10 ஆண்டு காலமாக தொடர் நட்டம் அடைந்து வருகிறது. இதில் திரட்டப்பட்ட நட்டம் ரூபாய் 252 கோடி ஆகும்.

நீலிக் கண்ணீர்
இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை அனைத்து தோட்ட நிறுவனங்களும் தோட்டக் கழகத்திடமே குத்தகை அடிப்படையில் இருந்துவந்தன. 2012 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் டேன்டீ நிறுவனத்தின் நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் பணியை முதலில் செய்தது. அது மட்டுமல்ல இன்று தேயிலை கழகத்தின் நிலங்கள் அரசு வனத்துறைக்கு வழங்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அவரது ஆட்சிக் காலத்தில், அதாவது 2012 முதல் 2109 வரை சுமார் 4710.5 ஏக்கர் பரப்பளவிலான கழகத்தின் நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதை ஏனோ வசதியாக மறந்துவிட்டார்.

டேன்டீ தொழிலாளர்கள்
டேன்டீ தொழிலாளர்கள் எவரும் குடியிருப்புகளிலிருந்து இதுவரை நிர்வாகத்தால் வெளியேற்றப்படவில்லை. பணியாளர்கள் ஓய்வுப்பெற்ற பின்னரும், பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் குடியிருப்பில் குடியிருப்போருக்கு பிற தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு அவர்களுக்கு Notice வழங்குவது வழக்கமான நடைமுறையே; முந்தைய ஆட்சியிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. நிலங்களின் ஒரு பகுதியை வனத்துறைக்கு வழங்குவதன் மூலம், தேயிலைத் தோட்டப் பகுதிகளை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தி தரவும் இயலும்.

பணிப்பாதுகாப்பு
இந்த நடவடிக்கையானது, இக்கழகத்தை லாபமீட்டும் ஒன்றாக நடத்துவதற்கும் அதன்மூலம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்விட வசதிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கிடவும் வழிவகுக்கும். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் யாரும் பணியிலிருந்து வெளியேற்றப்படவில்லை அவர்களுக்கு பணி பாதிப்பு ஏதுமில்லை அவர்கள் அனைவருக்கும் உரிய பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கத் தேவையில்லை.

பயத்தை உருவாக்க வேண்டாம்
தொழிலாளர்களுக்கோ, பணியாளர்களுக்கோ வேலை இழப்பு ஏதும் இல்லாத சூழலில், அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்க வேண்டாம். இத்தேயிலைத் தோட்டக் கழகத்தினை தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications