சிங்கப்பூர் முன்னாள் அதிபரை கட்டிப்போட்ட தேவா இசை! சர்வதேச தலைவர்கள் முன் ஒலித்த தஞ்சாவூர் பாடல்
சென்னை: சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ். ஆர் நாதன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் உலக தலைவர்கள் முன்பாக தேனிசைத் தென்றல் தேவாவின் பாடல் ஒலித்தது சர்வதேச அரங்கில் கவனம் பெற்றது. முரளி நடிப்பில் வெளியான பொற்காலம் படத்தில் உள்ள "தஞ்சாவூரு மண்ணெடுத்து" என்ற பாடல் சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் இறுதிச்சடங்கில் பாடப்பட்டது.
தேனிசை தென்றல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா இன்று மரணம் அடைந்தார். 76 வயதான தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், திரை ரசிகர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தேவாவின் தீவிர ரசிகர்
திரைத்துறையில் கானா இசையை புகுத்தி அதில் பெரும் வெற்றி கண்ட தேவா குறித்த பல்வேறு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர் மறைந்த அதிபர் எஸ். ஆர் நாதன், தேவா இசையை விரும்பி ரசித்து வந்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் கடந்த 1999 - 2011 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் செல்லப்பன் ராமநாதன். சுருக்கமாக எஸ்.ஆர் ராமநாதன் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். தமிழ் பாடல்களை விரும்பி கேட்கும் இவர், தேவாவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.
இறுதிச்சடங்கில் ஒலித்த பாடல்
இவர் தனது மறைவுக்கு பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் , "பொற்காலம் படத்தில் தேவாவின் இசையில் வெளியான தஞ்சாவூர் மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியை ஊற்றி சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த பொம்மை" என்ற பாடல் ஒலிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பப்படியே, தேவாவின் பாடல், இறுதிச்சடங்கின் போது ஒலிக்க விடப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட தமிழ் பாடலை மறைந்த மறைந்த சிங்கப்பூர் அதிபர் மிகவும் விரும்பினார். தஞ்சாவூர் மண் எடுத்து என்ற பாடலை அதிகம் ரசித்து கேட்பார். இந்த பாடலின் அர்த்தம் என்னவென்றால், பொம்மை செய்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மண் எடுத்து அதை செய்தேன் என்பதாகும்" என்று விளக்கி உலக தலைவர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் அதிபர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. இறுதிச்சடங்கு அரங்கில் இருந்த அனைவரும் இந்த பாடலை அமைதியாக கேட்டனர்.
வேறு எந்த தமிழ் இசை அமைப்பாளருக்கும்
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் உலக தலைவர்கள் முன்பாக தேவாவின் பாடல் ஒலித்தது சர்வதேச அரங்கில் கவனம் பெற்ற ஒன்றாக அமைந்து இருந்தது. இத்தகைய பெருமை வேறு எந்த தமிழ் இசை அமைப்பாளருக்கும் இதுவரை கிடைத்து இருக்கிறதா? என்று தெரியவில்லை.
அந்த அளவுக்கு தனது இசையால் எல்லைகளை கடந்து ரசிகர்களை கட்டிப்போட்ட தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகவே அமைந்துள்ளது. தேவா மறைவால் அதிர்ச்சி அடைந்த அவருடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் அவருடனான பசுமையான நினைவுகளை பகிர்ந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தேவாவின் பாடல்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.





Click it and Unblock the Notifications
