ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை கத்திகளுடன் துரத்திய கும்பல்.. சினிமா பாணியில் நடந்த சேசிங்!
சென்னை: புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்ற கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி என்ற மாசிலாமணி (38). ரவுடியான இவரை அடிதடி வழக்கு தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து மாலையில் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாசிலாமணியை அழைத்துச் செல்வதற்காக அவரது நண்பர்கள் 4 பேர் அங்கு இருந்தனர். அப்போது மாசிலாமணியை தீர்த்துக்கட்ட ஒரு கும்பலும் அங்கு தயாராக காத்திருந்தது.

மாசிலாமணி காரில் ஏறியதும், கார் புறப்பட்டு சென்னைக்கு கிளம்பியது. உடனே 2 பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றது. திடீரென அந்த கும்பல், சினிமா பாணியில் காரை வழிமறித்து, கத்திகளால் கார் கண்ணாடியை வெட்டி சேதப்படுத்தியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி, கார் டிரைவரிடம் உடனடியாக காரை திருப்பி புழல் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினார். உடனடியாக டிரைவர், புழல் காவல் நிலையத்துக்கு காரை ஓட்டிச்சென்றார். இதனால் பைக்குகளில் வந்த கும்பல் கத்திகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாழ்வேந்தன் (20), நரேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சினிமா காட்சி போல் காரை கத்திகளால் வெட்டி, ரவுடியை கொலை செய்ய விரட்டிய சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூரில் போலீசாரிடம் புகார் தெரிவித்த அடுத்த நாளே, துணை நடிகர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறை அருகே, சிறையில் இருந்து வந்த நபரை கொல்ல முயன்ற சம்பவம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
