அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம்.. சீனுக்கு வந்த காயத்ரி ரகுராம்.. என்ன இப்படி சொல்றாங்களே!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் தனது சொத்துக்கணக்கை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில், பாஜகவின் காயத்திரி ரகுராம் அது பற்றி போஸ்ட் செய்துள்ளார் .
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை கையில் கட்டியிருந்த வாட்ச் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் அளித்திருந்த பதில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "இந்த வாட்ச் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்தது. ரஃபேல் விமானத்தை தயாரித்தும் இதே நிறுவனம்தான். அந்த விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த வாட்ச்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்

ரஃபேல் வாட்ச்
மேலும், "உலகம் முழுவதும் இது போன்று வெறும் 500 வாட்சகள்தான் இருக்கிறது. எனவே என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். ரஃபேல் விமானத்தின் வாட்சை நம்மை தவிர வேறு யார் வாங்குவார்? எனவே இந்தியன்தான் வாங்க வேண்டும். நமது நாட்டுக்காக, டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் செய்து தந்த ரஃபேல் விமானத்தின் பாகங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாட்சை நான் கட்டியிருக்கிறேன். ஏனெனில் நான் தேசியவாதி" என்று கூறியிருந்தார். பிரான்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுத்த வாட்சை கட்டிக்கொண்டு தேசியவாதி என்று அண்ணாமலை பேசுகிறார் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்தது.

கேள்வி
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் வாட்ச் வாங்கிய கணக்கை காட்டுமாறு கேட்டிருந்தார். அதாவது, "பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, ரூ.5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

ரசீது
வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவ்வளவுதான் இதன் பின்னர் திமுக, பாஜக ஆதரவாளர்கள் டிவிட்டரில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். அண்ணாமலைக்கு நாராயணன் திருப்பதியும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ராஜீவ்காந்தியும் களத்தில் குதிக்க மாறி மாறி குற்றச்சாட்டுகள் பறந்தன. இதனையடுத்து அமைச்சரின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அந்த பதிலில், இந்த வாட்ச் 2021க்கு முன்னர் அதாவது தமிழக பாஜக தலைவராவதற்கு முன்னர் வாங்கியதாகவும், இதற்கான ரசீதை மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தின் போது வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

சாம்பார் கணக்கு
இந்த நடைப்பயணம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறிய அண்ணாமலை, அன்றைய தினம் இந்த வாட்ச்சுக்கான ரசீது மட்டுமல்லாது தன்னுடைய சொத்து விவரங்களையும் வெளியிடுவேன் என கூறியிருந்தார். இந்த விவரங்களில் உள்ள மதிப்பைவிட கூடுதல் சொத்திருப்பதாக நிரூபித்தால் அனைத்தையும் அரசாங்கத்திடமே கொடுத்துவிடுகிறேன் எனவும் கூறியிருந்தார். இதற்கு திமுகவினர், "வாட்ச் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் காட்ட சொன்னால் தேவையற்ற கதை எதற்கு" என்று கேள்வியெழுப்பினர். அமைச்சர் செந்தில் பாலஜியும், "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.

கலாய்
இந்நிலையில், பாஜகவின் காயத்ரி ரகுராம், இதை பற்றி போஸ்ட் செய்துள்ளார். இது தொடர்பாக இன்று ட்விட்டரில், "தேர்தலுக்கு முன் வேட்பாளர்களின் சொத்துக்களை அறிவிப்பது பெரிய விஷயமல்ல. கறுப்புப் பணத்தை யாரும் அறிவிக்கப் போவதில்லை, குடும்பம்/உறவினர்களின் சொத்தை யாரும் அறிவிக்க மாட்டார்கள்.. இப்போதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் பினாமிகள். யாரும் சுத்தமாக இல்லை. ஊழலுக்கு முடிவே இல்லை. ஒரு மனிதனின் வளர்ச்சி மக்களால் பாராட்டப்படுகிறது. ஒருவரின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். ஆனால் ஊழல் பெருகினால் நாம் கண்டிக்க வேண்டும். மக்கள் கண்டிப்பார்கள். இந்த செய்தி அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்" என்று கூறியுள்ளார்.

சேம் சைடு கோல்
அண்ணாமலைக்குதான் இந்த பதில் என்பது தெளிவாக தெரிந்துவிடும் என்பதற்காக மேலும் "பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர். ஊழல் செய்பவர்களை அவர் விடமாட்டார். ஏழைகளின் வலி அவருக்குத் தெரியும். மேலும் கறுப்புப் பணத்தை மாற்ற அல்லது மறைக்க என்ஜிஓக்கள்..அறக்கட்டளைகள் உள்ளன" என்று கூடுதல் பாயிண்டுகளை சேர்ந்து ட்வீட் செய்துள்ளார். ஏற்கெனவே அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராகும்கும் இடையே பெரிய ஏழரை பொருத்தம் இருந்த வந்த நிலையில், தற்போது காயத்ரி ரகுராம் சேம் சைட் கோல் அடித்துவிட்டாரே என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications