டிரைவிங் லைசென்ஸ் பெறுவோருக்கு குட் நியூஸ்: இனி RTO அலுவலகம் போக வேண்டாம்! சென்னை நடைமுறை மாற்றம்
சென்னை: புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற அதிரடி மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது. போக்குவரத்துத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைகளுக்குப் பிறகு, பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் உள்ள புதிய விதிமுறைகள் மற்றும் ஆன்லைன் வசதிகள் குறித்த சுருக்கமான தகவல்கள் இதோ..!!
முன்பெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என்றால் ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. ஆர்டிஓ அலுவலகத்தில் நாள் கணக்கில் காத்திருப்பது, வேலைகளை விட்டுவிட்டு அலைய வேண்டியது எனப் பொதுமக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் இப்போது அந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. நீங்கள் ஒரு புது வாகன ஓட்டியாக இருந்தால், இந்த மாற்றங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் விதிமுறை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலேயே பயிற்சியை முடித்துவிடலாம். அங்கு நடத்தப்படும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களே உங்களுக்குச் சான்றிதழ் வழங்கி விடுவார்கள்.
அந்த சான்றிதழை வைத்தே நீங்கள் உரிமம் பெற முடியும். இதன் மூலம் இனி ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்வுக்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் நேரம் மிச்சமாகும், அலைச்சலும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பம், அப்லோடு செய்வது
இப்போது பெரும்பாலான செயல்முறைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதால், விண்ணப்பிக்கும் முறையும் எளிதாகிவிட்டது. மத்திய அரசின் "சாரதி பரிவஹன்" என்ற வெப்சைட்டுக்கு சென்று, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அங்கு உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து அங்கேயே பதிவேற்றலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலமே செலுத்திவிடலாம். விண்ணப்பித்த பிறகு உங்கள் உரிமம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் இணையதளம் மூலமாகவே நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால்?
ஒருவேளை உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் இனி கவலைப்படத் தேவையில்லை. முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் உரிமம் தொலைந்துவிட்டதாகத் தகவல் அளித்து, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு, மீண்டும் "சாரதி பரிவஹன்" இணையதளத்திற்குச் சென்று டூப்ளிகேட் லைசன்ஸ் (Duplicate License) பெறுவதற்கான பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களுடைய பழைய லைசென்ஸ் எண் மற்றும் விவரங்களைக் கொடுத்து, அதற்கான சிறிய தொகையைக் கட்டணமாக செலுத்தினாலே போதும். உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, சில நாட்களிலேயே புதிய ஸ்மார்ட் கார்டு உரிமம் தபால் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கே வந்து சேரும்.
அரசு கொண்டு வந்துள்ள இந்த வசதிகள் மூலம் பொதுமக்கள் இடைத்தரகர்களை நாடாமல், தங்களின் உரிமத்தை எளிதாகப் பெற முடியும். ஆன்லைன் முறையைப் பயன்படுத்தத் தெரிந்தாலே போதும், மிகக் குறைந்த செலவில் யாருடைய உதவியும் இன்றி டிரைவிங் லைசென்ஸ் உங்கள் கைக்கு வந்து சேரும்.












Click it and Unblock the Notifications