தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு -ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக இந்த சட்ட மசோதா கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதன் மூலம் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 20 % இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடும்.
8 வழிச்சாலை விவகாரம்... பாஜக மற்றும் அதிமுக அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் -ஸ்டாலின்

ஆளுநர் ஒப்புதல்
பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் கேள்வி
சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆளுநர் 20% இட ஒதுக்கீடு சட்டமசோதாவிற்கு ஒப்புதல் தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனக் கூறியிருந்தார்.

தமிழ் வழிக்கல்வி
இந்நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதன் மூலம் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

சாதகமான சூழல்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக அரசுக்கு இது பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. தேர்தல் பரப்புரையின் போது இந்த நடவடிக்கைகளை எடுத்துக்கூறி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் வாக்குக் கேட்க ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.