'ஒரு இயரிங் எயிட் மிஷின் பார்சல்'..ஆ.ராசா விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவை வம்பிழுத்த பாஜக எச்.ராஜா
சென்னை: திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் மனுஸ்மிருதி தொடர்பான விமர்சனத்துக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் சேகர்பாபுவை ட்விட்டர் மூலம் வம்பிழுக்கும் வகையில் பதிவு போட்டுள்ளார் பாஜகவின் எச்.ராஜா.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, 'ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் நாராயணன் திருப்பதி, காங்கிரஸின் அமெரிக்கை நாராயணன் ஆகியோர் ஆ.ராசாவை மிகக் கடுமையாக விமர்சித்தினர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்திருந்தார்.
இதனிடையே ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் பாஜகவினர் மற்றும் இந்து குழுக்கள் போலீசில் புகார் மனு கொடுத்தனர். இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றும் வருகின்றன. ஆ.ராசாவின் இந்த பேச்சு, எதிர்வினைகள் குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சைகையால், தமக்கு காது கேட்கவில்லை என சுட்டிக்காட்டி கையெடுத்து கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார் சேகர் பாபு.

அமைச்சர் சேகர்பாபு கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பதையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபுவின் பெயர், ஆ.ராசா சர்ச்சை என எதனையும் குறிப்பிடாமல் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு இயரிங் எயிட் மிஷின் பார்சல் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது ட்விட்டர் பதிவின் பின்னூட்டங்களில் அமைச்சர் சேகர்பாபுவைத்தான் எச்.ராஜா குறிப்பிடுவதாக பதிவிடப்பட்டு வருகிறது. எச்.ராஜாவின் இந்தப் பதிவு இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications