கனமழை வருது.. கவனமா இருங்க! மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அலர்ட்
சென்னை: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கனமழை பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா, திருவனந்தபுரம் உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கன்னியாகுமரி மற்றும் தென்மேற்கு தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரள மாநிலத்தையொட்டியுள்ள தென் தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று முதல் 4ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பில், 01.08.2022 முதல் 04.08.2022 வரை அதி கனமழை பெய்ய உள்ளதாக (Red Alert) முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் வெள்ள சேதவிபரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விபரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமின்றி செயல்படும் தொலைப்பேசி எண் 1077 மற்றும் 04652 231077க்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications