திருப்போரூர் கோவில் நிலம்..50 கடைகள் கட்டி உள்வாடகைக்கு விட்டு பெரும் சம்பாத்தியம்..பாய்ந்த நடவடிக்கை
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் கேளம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்கும் நடவடிக்கை நடந்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளளது.
கேளம்பாக்கம், ஓஎம்ஆர் பகுதியில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத செங்கன்மால்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் வணிக பயன்பாட்டிற்காக 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் குத்தகைக்கு எடுத்த நபர், ஒப்பந்த நிபந்தனைகளை மீறி அந்த நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி உள்வாடகைக்கு விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நிலத்தை அவரிடம் இருந்து மீட்க சட்டநடவடிக்கையில் இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவர் குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சட்ட விதிகளுக்கு புறம்பாக கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி அவற்றை சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்டுள்ளதாக தெரியவந்தது. இதன்மூலம் கோவிலின் நலனுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாக புகார்கள் எழுந்தன.
இவ்விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் குத்தகை நிபந்தனைகளை மீறி செயல்பட்டதைக் கருத்தில்கொண்டு, அவருக்கான குத்தகையை ரத்து செய்தும் மேற்படி சொத்தை கோவில் வசம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2-ந்தேதி (நேற்று முன்தினம்) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, கூடுதல் ஆணையர் ரத்னாவின் தலைமையில், நில அளவையர்களை கொண்டு மேற்படி கோவில் நிலம் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் எல்லைகளை துல்லியமாக கண்டறிந்து, நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
