குஷியான எடப்பாடி.. “மாறிப்போச்சு”.. 4 நாள் இருக்கே.. ‘சிக்னல் வரும்’ - ஓபிஎஸ் டீம் தலை போட்ட போடு!
சென்னை : ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரிகள் தவறாக அழைப்பிதழ் அனுப்பி இருக்கலாம் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜி 20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் அதில் ஏதேனும் ஒரு நாளில் ஓபிஎஸ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பிளவு விவகாரத்தில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் பாஜக சமமாக நடத்துவதாக கூறப்படும் நிலையில், ஜி20 ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே, எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், டெல்லிக்கு ஈபிஎஸ் அழைக்கப்பட்டது பற்றி ஓபிஎஸ் தரப்பு தவறுதலாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளது.

ஓபிஎஸ் ஈபிஎஸ்
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவுக்கு மத்தியில் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதேசமயம், ஓபிஎஸ், ஈபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. பாஜக தலைமை, அதிமுக இரண்டு அணிகளாக இருப்பது நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகிறது. எனவே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

எடப்பாடிக்கு அழைப்பு
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் விருப்பத்தை ஏற்க மறுத்து வருகிறார். இதனால், கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் கூட எடப்பாடி பழனிசாமியை ஒரே தட்டிலேயே வைத்து நடத்தி வருகிறது பாஜக தலைமை. பாஜக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையுமே ஒரே தொலைவில் வைத்திருப்பது ஈபிஎஸ் அணியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் வகையில் ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி குஷி
இதையடுத்து நேற்று டெல்லி சென்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துவிட்டு டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் அணி உற்சாகம்
பாஜக, எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்துள்ளது ஈபிஎஸ் அணியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் என்று கூட குறிப்பிடாமல், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு அழைப்பிதழை அனுப்பியுள்ளது டெல்லி. இதனால், இடைக்கால பொதுச் செயலாளராக பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருப்பதாகவும், தனது ஆதரவு அவருக்கே என பாஜக தெளிவுபடுத்தி இருப்பதாகவும் உற்சாகமாகி இருக்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர்.

அங்கீகாரம்
கட்சியில் பிளவு கிடையாது, பிரிவும் கிடையாது, அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளால் கொடுக்கப்பட்ட பொறுப்பு தான் இடைக்கால பொதுச் செயலாளர். அதன் அடிப்படையில் தான் ஜி-20 மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது பொதுச்செயலாளர் என அழைப்பிதழில் குறிப்பிட்டு மத்திய அரசிடம் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளது என ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டெக்னிக்கல் பிரச்சனை
அதேசமயம், ஓபிஎஸ் அணிக்கு இது சறுக்கலாக அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டுள்ளது தொடர்பாகப் பேசியுள்ள ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதே நேரத்தில் கட்சி சார்பாக அழைக்கப்பட்டு இருந்தால் தவறு என்று எடுத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் இதில் ஏதேனும் டெக்னிக்கல் பிரச்சனையாக இருக்கும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலையின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் கலந்து கொள்ள வாய்ப்பு
மேலும், இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், எனவே அவர்கள் திருத்தம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக இரண்டு அணியாக இருப்பது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கும், எனவே யாரோ கூறியதை வைத்து அழைப்பிதழ் அனுப்பி இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஜி 20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இதில் ஏதேனும் ஒரு நாளில் ஓபிஎஸ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications