ஏகப்பட்ட அழுத்தம், பிரஷர்.. ஆனாலும் அடித்து ஆடும் விக்னேஷ்.. விஜய் அமைச்சரவையில் ஒரு முத்து!
சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் நிர்வாக ரீதியான அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. பல அமைச்சர்கள் கடுமையான விமர்சனங்களை சந்திக்கின்றனர். அமைச்சர் கீர்த்தனா போன்றோர் தங்கள் துறை ரீதியான தகவல்களே அறியாமல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, எப்போதும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில், மிகக் குறுகிய காலத்தில் அமைச்சர் கே.விக்னேஷ் மேற்கொண்டு வரும் தொடர் சீர்திருத்தங்கள் தவெக அமைச்சரவையில் அவரை ஒரு முக்கிய அமைச்சராக நிலைநிறுத்தியுள்ளது.

தரமற்ற 11 வகை மதுபானங்களுக்கு உடனடி தடை
அமைச்சர் கே.விக்னேஷ் எடுத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கையாக, டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் என்ரிகா நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் மதுபானங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக என்ரிகா நிறுவனத்தின் 10 வகையான பிராந்திகள் மற்றும் ஒரு ரம் வகையை டாஸ்மாக் விற்பனையிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வீரன், VSOP எக்ஸ்ஷா கோல்ட், ஹனி பீ ஃபைன், மென்ஸ்கிளப் டீலக்ஸ் உள்ளிட்ட பிரபல பிராந்தி வகைகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. தரமற்ற தயாரிப்புகளுக்கு இடமில்லை என்பதை உற்பத்தியாளர்களுக்குத் திட்டவட்டமாக உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
717 கடைகள் மூடல்
ஆட்சி அமைந்த முதல் கட்டத்திலேயே, பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளை நிரந்தரமாக மூடி உத்தரவிட்டார். பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் போராடி வந்த இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தீர்வு காணப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இடைத்தரகர்கள் இல்லாத அரசு வருவாய் கட்டமைப்பு
டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விநியோகச் சங்கிலியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொள்முதல் நடைமுறைகளை முறைப்படுத்தி, மதுபான ஆலைகள் மற்றும் பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முறையான அரசு வரிகள் (IMFS பெட்டிக்கு ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40, ஒயின் பெட்டிக்கு ரூ.20) முறையாக நிர்ணயிக்கப்பட்டன. இதன்மூலம் இடைத்தரகர்களின் கைகளுக்குச் செல்லாமல், அரசு கஜானாவிற்கு நேரடியாக ஆண்டுக்குக் கூடுதல் வருவாய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக விலை வசூலுக்கு முற்றுப்புள்ளி
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ₹10 முதல் ₹20 வரை கூடுதல் விலை வசூலிக்கப்படுவதைத் தடுக்க, அதிகாரப்பூர்வ போர்ட்டல் மூலம் ஆன்லைன் முன்பதிவு மற்றும் QR கோடு ஸ்கேன் செய்து மதுபானங்களை வாங்கும் நவீன டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் MRP விலைக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத வெளிப்படையான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.
பணியாளர்கள் நலன்
விற்பனையாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்த காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணிகளை வெளி அமைப்பிடம் ஒப்படைக்கவும், தயாரிப்பு நிலையிலேயே பார்கோடு அமைப்பை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 25% வரை ஊதிய உயர்வை கட்டம் கட்டமாக அமல்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களின் சிறந்த சில்லறை வர்த்தக மாதிரிகளை ஆய்வு செய்து நிரந்தரக் கொள்கை முடிவுகளை வகுக்கத் தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன், வெளிப்படைத்தன்மை, ஊழியர்கள் நலன் மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாடு என அனைத்து முனைகளிலும் வேகமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வருவதன் மூலம், முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் திறம்படச் செயல்படும் அமைச்சர்களில் ஒருவராக கே.விக்னேஷ் உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
