'வந்தது போன் கால்..' தமிழக கோவில்களில் பிரதமர் நிகழ்ச்சி லைவ் ஒளிபரப்பு ஏன்? மவுனத்தின் பின்னணி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சி தமிழகத்தின் முக்கிய கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மவுனம் காக்கும் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த நவம்பர் 5ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தளம் கேதார்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை நிறுவி அங்கு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மிகப் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் திருக்கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் பங்கேற்றார். ராமேஸ்வரம் சிவன் கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இவ்வாறு முக்கிய கோவில்களில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பக்தர்களோடு அமர்ந்து இந்த நிகழ்வை பார்த்தனர்.

பக்தர்களில் எதிர்ப்பு
இந்த நிகழ்வை அனைத்து பக்தர்களும் ஏற்றுக் கொண்டார்களா என்றால் கிடையாது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வைணவரான ரங்கராஜன் நரசிம்மன் இதை எதிர்த்து வீடியோ வெளியிட்டிருந்தார். கோவில் வளாகத்துக்குள் அரசியல் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார். அண்ணாமலை மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ரங்கராஜன் நரசிம்மன் புகார் அளித்தார்.

வீரமணி, சீமான்
பக்தர்கள் ஒரு பக்கம் என்றால் , திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்து சமய அறநிலையத்துறையை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று சீமான் கேள்வி எழுப்பி இருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவை தமிழக திருக்கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்தது ஒரு ஆன்மீக நிகழ்ச்சியாகும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை தான் இதற்கு ஏற்பாடு செய்தது என்று தெரிவித்திருந்தார்.

சேகர்பாபு பதில் இல்லை
இந்த விஷயம் பற்றி எவ்வளவு தூரம் விவாதங்கள் நடந்த போதிலும் கூட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அல்லது வேறு எந்த அதிகாரிகளும் இதுவரை பதில் அளிக்கவில்லை. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் நிவாரணப் பணிகளில் சேகர்பாபு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எனவே இது தொடர்பான கேள்விகளை அவர் தவிர்த்து விடுகிறார் என்று அவரை சுற்றியுள்ள வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்தியிலிருந்து வந்த போன்
தற்போது இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்துக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்தில், இறைவன் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு முக்கியமான அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோவில்களில் இந்த நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு முதல்வரிடம் பேசி ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் அதற்கு பிறகு சில தினங்கள் கழித்து இதற்கான அனுமதி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலே இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக சம்மதம் இருக்கோ இருக்கிறதோ இல்லையோ இந்து சமய அறநிலையத்துறை இதற்கு சரி என்று சொல்லி விட்டதாக கூறப்படுகிறது .

பாஜக-திமுக
சமீபத்தில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. அதிமுகவினரை, திமுகவினர், அடிமைகள் என்று சொன்னார்கள், இதற்கு பெயர் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பினார். இது வழக்கமான நிகழ்வுதான் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்திருந்தார். தற்போது இந்த விஷயத்தில் இந்து சமய அறநிலைத்துறை இதுவரை பதில் அளிக்கவில்லை. மத்திய மாநில அரசுகள் இணைந்து செல்ல விரும்புகின்றனவா,அல்லது வேறு என்ன காரணம் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த மவுனம் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications