நான் தமிழன்தான்; என் ரத்தத்தில் தமிழ்தான் இருக்கு! மலேசியாவில் ஒலித்த ஏ.ஆர்.ரஹ்மான் குரல்!
சென்னை: தான் வாங்கிய ஆஸ்கர் விருது இப்போது எங்கே இருக்கிறது? என்பது பற்றியும் ஒரு தமிழனாக தன்னை வெளிமாநில மக்கள் ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம் என்றும் மலேசியா ஊடகம் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 27 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்காக அவர் மலேசியாவுக்குப் போய் இருக்கிறார். கூடவே அவரது இசையில் 'ராயன்' அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. ரஹ்மானின் ரசிகர்கள் அனைவரும் இப்போது, 'போகி போகி போகி' பாடல் வரிகளை வாய் நிறைய அசைப்போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ரஹ்மான் சில நாட்களாக மலேசியாவில் பிசியாக தனது இசைக் கச்சேரி வேலைகளைப் பார்த்து வருகிறார். அங்குள்ள ஊடகங்களில் தோன்றி தனது பழைய நினைவுகளைப் பேசி வருகிறார். அப்படி மலேசியாவில் உள்ள ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ள அவர் பல விசயங்களுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார். ரஹ்மான் தனது பேட்டியில், "ஒவ்வொரு முறையும் இசை நிகழ்ச்சி நடத்தும்போதும் என்ன மாதிரியான புதுமையான விசயங்களைச் செய்யலாம் என்று யோசித்து பார்த்துத்தான் செய்கிறோம். ஒரே மாதிரியே பாடாமல் இசை நுணுக்கத்தில் ஏதேனும் சின்ன சின்ன மாற்றம் செய்ய திட்டமிடுவோம்.
அதேபோல மேடை அமைப்பதில் தொடங்கி, அடை வடிவமைப்பது வரை அனைத்திலும் ஒரு வித்தியாசம் செய்ய விரும்புவோம். அதைப்பற்றியே இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம்" என்றவர் தனுஷ் நடிப்பில் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ள ராயன் படத்தில் 'உசுரே நீதானே..கடலா உன்கூட நான் தானே.." என்று பாடல் ஹிட் பற்றி தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
"பலரும் என்ன கேட்கிறார்கள் என்றால், ஒரு நல்ல குத்துப் பாட்டு வேண்டும் என்கிறார்கள். அதில் ஒரு எனர்ஜி இருக்கிறது. அதுதான் மக்களை அதிகமாகப் படத்தின் பக்கம் இழுக்கிறது. என்னதான் குத்துப் பாட்டு என்று ஒன்று இசையமைத்தாலும் ஒரு இசையமைப்பாளரின் மூளை எப்போதும். ஒரு மெலோடி பாடலை எங்கே கொண்டுபோய் புகுத்த முடியும் என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டே இருக்கும். மெலோடிக்குள் தான் ஒரு ஈரம் இருக்கிறது. அந்த ஈரத்தைக் கொண்டுவந்தால்தான் ஆடியன்ஸ் மனதிற்குள் அது போய் சேரும்.
அதற்காகத்தான் குத்துப் பாடலாக இருந்தாலும் உள்ளே ஒரு நாலு வரி மெலோடியை உள்ளே வைக்கிறோம். இன்னும் தெளிவாகச் சொன்னால், அது ஒரு மேஜிக்தான். நான் 'ரோஜா' படத்திற்கு இசையமைத்ததைப் போல இன்று திரையிசை உலகம் இல்லை. அப்போது படத்தில் பாடலைக்கேட்கலாம். அதைவிட்டால் ஆடியோ கேசட்டில் வரும். அதைவிட்டால் வீடியோ கேசட். இப்போது உள்ளதைப் போலப் பலவகையான சமூகத் தளங்கள் இல்லை. ஆகவே, அனைத்தையும் மனதிற்குள் வைத்துத்தான் ஒரு பாடலை உருவாக்க வேண்டி உள்ளது.
ஒருமுறை எனது நண்பர் ஒருவர் எனது சில இசைக் கோர்வைகளைக் கேட்டார். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. அப்போது நான், 'இவை எல்லாம் என் படத்தில் பயன்படுத்தி விட்டேனே? அதை ஏன் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நீங்க கேட்டு இருக்கிறீர்கள்.. உங்கள் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், வேறு புதிய ஆடியன்ஸ் கேட்கும் படி நாம் அதை புதிய கலவையாக மாற்றிக் கொடுத்தால் அது அவர்களுக்கு புதியதாகத்தானே இருக்கும்?' என்றார்.
அப்போதுதான் நான் அதை உணர்ந்தேன். 'ரோஜா' படத்தில் பெண் பார்க்க வரும்போது ஒரு இசைக்கோர்வையை நான் பயன்படுத்தி இருந்தேன். அது பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. அதை மட்டும் வேறு படத்தில் ஒரு பாடலுக்கான டியூன் ஆக மாற்றி அமைத்தேன். ஒரு பிஜிஎம் அப்படியே பாடலாக மாற்றப்பட்டது. அதைப் பலரும் கவனிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

வழக்கமான வெளிநாடுகளில் ரஹ்மான் இசைக்கச்சேரி நடத்தும் போது வெறுமனே தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடுவதில்லை என்ற ஒரு புகார் இருந்து வருகிறது. அது பற்றிப் பேசிய ரஹ்மான், " இந்த முறை தமிழ்ப் பாடல்களை மட்டும்தான் பாடப் போகிறோம். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். நான் தமிழ்நாட்டு எல்லையைவிட்டு வெளியே போனதே பெரிய விசயம்.என்னை வெளி மாநிலத்து மக்கள் ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம். ஆகவே, அவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக இந்திப் பாடல்களையும் சேர்த்துப் பாடி வருகிறோம். இது தமிழருக்கு ஒரு பெருமை இல்லையா? இதற்கான முக்கிய நோக்கம் அதுதான். ஆனாலும் சில பேர் முழுமையாகத் தமிழ்ப் பாடல்களையே பாடலாமே என்கிறார்கள். வழக்கமாக இசைக்கச்சேரி 2 மணிநேரம் என்றால், வேறு மொழியும் சேர்த்துப் பாடுவதால் 4 மணி நேரத்திற்கு மேல் கச்சேரி செய்கிறோம். அது நல்லதுதானே?
ஆஸ்கார் அவையில் பலரும் ஆங்கிலத்தில் பேசிய போது நீங்கள் தமிழைச் சொன்னதே பெரிய விசயம் இல்லையா? என்ற கேள்விக்கு, "அது நம் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது இல்லையா? அதை எப்படி விட முடியும்? ஒரு எறும்பு கடித்தால் கூட அம்மா என்றுதானே நான் கத்துகிறேன். ஆகவே தமிழை எப்படி மறக்க முடியும்?" என்கிறார்
பாடல்களில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, "நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? ஏன் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று முன் முடிவுடன் இருக்க வேண்டும்? பழந்தமிழ் சொற்களை நாம் இளம் தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்றால் நாம் எதற்கு இருக்கிறோம்? அது நம் கடமை இல்லையா?
அப்படித்தான் 'நறுமுகையே' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். அந்த சத்தம் ஒரு புது சத்தம். உங்களுக்கு ஒரு வார்த்தை புரியவில்லையா? கூகுள் போய் தேடி அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு எதற்குக் கூகுள் இருக்கிறது?" என்று விளக்கம் அளித்துள்ள ரஹ்மான் தனது குரலை ஏஐ மூலமாகப் பயன்படுத்திப் பாடப்படும் பாடல்களைக் கேட்டுள்ளதாகவும், ஆனால் இரண்டு வரிகள் மட்டுமே சரியாகப் பொருந்து போனதாகவும் கூறியுள்ளார். அவ்வளவு சரியாக அந்தக் குரல் அமைந்துவிட்டால், என்னால் 35 வருடங்களாக இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடிந்திருக்குமா? என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆஸ்கர் விருது வாங்கிய மறுநாள் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்தேன். அடுத்த நாள் இந்தியா வரும்போது விமானநிலையத்தில் பைக்குள் என்ன இருக்கிறது என்று அதிகாரிகள் விசாரித்தார்கள். அதை வெளியே எடுத்ததைப் பார்த்ததும் கிட்டத்தட்ட 200 பேர் அங்கே கூடி விட்டார்கள். அதன்பிறகு சிரித்துவிட்டு அதைக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் அதைக் கையில் எடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்து அம்மா உடனே ஒரு பெட்டியில் வைத்து விருதைப் பூட்டி விட்டார். அதன்பிறகு நான் அதைப் பார்க்கவே இல்லை. அது துபாய் ஸ்டுடியோவில் உள்ளது" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications