"எனக்கு சீட் வாங்கி தந்ததே ஆதவ் அர்ஜூனா தான்".. ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏவால் சபையில் சிரிப்பலை
சென்னை: ''இது உண்மை சம்பவம். பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) மறந்து இருப்பாரா? என்று எனக்கு தெரியவில்லை. நான் எங்களின் கட்சியில் (திமுக) முதல் முறையாக சீட் கேட்டு வந்தபோது அவர் (ஆதவ் அர்ஜுனா) தான் என்னை அழைத்து கொண்டு போய் என்னுடைய சொந்தக்காரர் என்று கூறி பேசியவர். இந்த இடத்தில் இதை சொல்லாவிட்டால் தப்பாக போய்விடும்'' எனக்கூறிய நிலையில் மொத்த சபையும் சிரிப்பலையில் மூழ்கியது.
தமிழக சட்டசபையில் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் எழுந்து பேசினார். அப்போது அவர் எனக்கு திமுகவில் போட்டியிட சீட் வாங்கி தந்ததே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தான் என்று கூறியபோது சபையில் இருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் சிரித்தனர். திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் பேசுகையில், ''எனக்கு நல்லா நெருக்கமானவர். அன்பானவர்'' என்றார்.

இதையடுத்து சபையை வழிநடத்திய துணை சபாநாயகர் ... அமைச்சரின் பெயரை கூறாமல் மாண்புமிகு அமைச்சர் என்று கூறினால் நன்றாக இருக்கும் என்றார். அதற்கு திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், ''ஏங்க.. எங்க நட்பில் ஏன் தலையிடுகிறீர்கள். நாங்க நல்ல நட்பாக இருக்கிறோம். அதை ஏன் பிரிக்க நினைக்கிறீர்கள்?'' என்று கூறினார்.
அதற்கு துணை சபாநாயகர், ''அவைக்கு வெளியே சென்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்'' என்றார். ஆனால் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் விடவில்லை. அவர் தொடர்ந்து பேசுகையில், ''இல்லை... இல்லை.. இது உண்மை சம்பவம். பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) மறந்து இருப்பாரா? என்று எனக்கு தெரியவில்லை.
நான் எங்களின் கட்சியிலேயே முதல் முறையாக சீட் கேட்டு வந்தபோது அவர் (ஆதவ் அர்ஜுனா) தான் என்னை அழைத்து கொண்டு போய் என்னுடைய சொந்தக்காரர் என்று கூறி பேசியவர். இங்கு லீமா ரோஸ்(அதிமுக எம்எல்ஏ - ஆதவ் அர்ஜூனாவின் மாமியார்) இருக்கிறார். இந்த இடத்தில் இதை சொல்லாவிட்டால் தப்பாக போய்விடும்'' எனக்கூறி சிரித்தார்.
இதையடுத்து சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர். இந்த வேளையில் ஆதவ் அர்ஜூனாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எழுந்து, ''இது எதற்கு என்று தெரியவில்லையே. அவர் (ஆதவ் அர்ஜூனா) பாட்டுக்கு சிவனே என்று உட்கார்ந்து இருக்கிறார். எதற்கு அவரை போட்டு கோர்த்து வாங்கிகிட்டு இருக்கிங்க என்று தெரியவில்லையே!’’ என்றார். இந்த விவாதம் சபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
