விமர்சனங்களுக்கு செயல்களால் பதில்..பொறுப்பாக பணியாற்றுவேன்..அமைச்சர் உதயநிதியின் முதல் பேட்டி
சென்னை: அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சராக பதவியேற்ற உடன் அப்பாவும் கட்சித்தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலையில் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 11 ஆண்டு காலத்தில் உதயநிதியின் சினிமா அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் சிறப்புத் தோற்றத்தில் சினிமாவில் அறிமுகமான உதயநிதி கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் தி.மு.க.வின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதன்பின்னர் சட்டசபைத் தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்த உதயநிதி திமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் அமைச்சர்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையில் இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று கூறி பதவியேற்ற போது பலரும் கை தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
விளையாடுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது அதில் என்ன செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே இலக்கு என கூறினார். அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பொறுப்பை என்னால் முடிந்த அளவுக்கு சரியாக செய்வேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தப் பணிகளில் எனது கவனம் இருக்கும்.
என் மேல் விமர்சனம் வைப்பவர்கள் வாரிசு அரசியல் என்று கூறுவார்கள். எனது செயல் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் படி செயல்படுவேன். தற்போது தான் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என்றும், இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது முதல் அறிக்கையில்"தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி நிற்கும் விழுதாக, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் தமிழ்நிலத்தில் வேரோடி மக்கள் வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது.
இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.
அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறுஉருவாக வாழும் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, கழக முன்னோடிகள் கழக உடன்பிறப்புகள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் இளைஞர் அணியினர் தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications