முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்களுக்கு செக்! இனி பொறுப்பு அதிகாரி மீதும் நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு
சென்னை : அரசு ஊழியர்களில் முறைகேடு செய்தவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, ஏற்கனவே அரசு பல உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சம்பவங்களில் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளபோதும், அதுதொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும், ஒரே நேரத்தில் எடுக்கலாம் என்றும், குற்ற வழக்கில் கூறப்படும் தீர்ப்பு, எந்த வகையிலும் துறை ரீதியான முடிவை பாதிக்காது என்றும் தெரிய வந்துள்ளது.

அரசாணை வெளியீடு
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதனால் அரசு ஊழியர் மீதான முறைகேடு வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்க தேவையில்லை. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்போது, அனைத்து ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி சென்றுவிடுவர். அதனால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு, காவல்துறையினரின் ஆவணங்களின் நகலை பெற்று நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

விசாரணை அதிகாரிக்கு அதிகாரம்
அதேபோல் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆஜராகா விட்டாலோ, எழுத்துப்பூர்வமான அறிக்கை தராவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ, எக்ஸ்பெர்ட் உத்தரவை விசாரணை அதிகாரி பிறப்பிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரி மீது நடவடிக்கை
அரசு ஊழியர் மீதான முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஊழியரை நீக்கம் செய்வது போன்ற பெரிய முடிவை, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று, எடுத்து கொள்ளக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு, துறை விசாரணை முடிவை பாதிக்காது. மேலும் முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications