காளிமுத்து, ராபின் மொயின்- எம்ஜிஆர் காலத்து பரபர கேஸை நினைவூட்டும் ஸ்டாலினின் அதியமான்கோட்டை விசிட்
சென்னை: 1985 ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரும் சென்னையில் நள்ளிரவுகளில் திடீரென முன்னறிவிப்பின்றி காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததை போல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் நேற்று இரவு திடீரென அதியமான்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் காவல் துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறார். காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு கட்டாயம், சாலையோர பாதுகாப்பு பணிகளில் பெண்களை ஈடுபடுத்துதல் கூடாது உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளார்.
அது போல் போலீஸார் பொதுமக்களிடம் இன்முகத்துடன் குறைகளை கேட்டறிய வேண்டும், யாரிடமும் தேவையற்ற கண்டிப்பை காட்டக் கூடாது என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

ஸ்டாலின் முதல்வராக
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கொரோனா 2-ஆவது அலை உச்சத்தில் இருந்த காலம். அப்போது ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், மருத்துவ படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வார் ரூம் ஒன்றை உருவாக்கி நாள்தோறும் எந்தெந்த மருத்துவமனையில் எத்தனை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஸ்டாக் இருக்கின்றன, எத்தனை படுக்கை வசதிகள் ஸ்டாக் இருக்கின்றன என்பதை பொதுமக்கள் போன் மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ப உரிய மருத்துவமனைக்கு செல்வதற்காகவே இந்த வார் ரூம் ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவமனை
இதன் மூலம் மருத்துவமனை மருத்துவமனையாக நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த வார் ரூமில் போன் செய்தால் அவர்கள் பேசுவோருக்கு அருகில் உள்ள மருத்துவமனை குறித்த விவரங்களை உடனடியாக வழங்கிவிடுவர். எனவே கால விரயமின்றி மக்கள் சிகிச்சை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்தார். ஒரு நாள் திடீரென இந்த வார் ரூமுக்கு ஸ்டாலின் ஆய்வுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு போன் காலை எடுத்து பேசி, மறுமுனையில் இருந்த பெண்ணுக்கு உதவி செய்தார்.

ரேஷன் கடைகள்
இது போல் ரேஷன் கடைகள், தடுப்பூசி முகாம்கள், சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகள், அரசு மருத்துவமனை என அவ்வப்போது அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த வண்ணம் உள்ளார். அந்த வகையில் சேலத்தில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்க சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென ஆய்வுக்கு வந்திருந்தார். அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர் அறிவுறுத்தினார். இந்த செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். அது போல் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எம்ஜிஆர்
ஸ்டாலின் செயல்பாடுகளை பார்த்த சிலர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவர் செய்த ஆய்வுகளை நினைவுப்படுத்தி பார்க்கிறார்கள். 1985 களில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரும், சட்டத் துறை அமைச்சராக இருந்த பொன்னையனும் சென்னையில் இரவு நேரங்களில் இது போன்ற திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கமாம். வங்கி மோசடிகளில் ஈடுபட்டிருந்த ராபின் மெயின் என்பவர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்குள்படுத்தப்பட்டிருந்த எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு நாள் இரவு எம்ஜிஆர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ராபின் மொயின் கேஸ்
ராபின் மொயின் வழக்கானது எம்ஜிஆர் காலத்தில் அதிகம் பேசப்பட்ட மிகப் பெரிய வழக்காகும். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் அப்போதைய வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து. இவர் 1982-83 ஆம் ஆண்டுகளில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மைத் துறை நிதியை முதலீடு செய்வதாகவும் அதற்கு கைமாறாக தனது நண்பர் ராபின் மெயினுக்கு வாகனக் கடன்களை வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக காளிமுத்து மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட காளிமுத்து உள்பட 16 பேர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு 2016ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இறந்து போன 16 பேரை தவிர்த்து மீதமுள்ள 16 பேரில் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் 11 பேரை விடுதலை செய்தும் சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த 5 பேரில் ராபின் மெயினுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ 1.08 கோடி அபராதமும் சூரியக்குமாருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் ரூ 29 லட்சம் அபராதமும் சோமசுந்திரத்திற்கு 4 ஆண்டுகள் கடுங்காவலும் 20 லட்சம் அபராதமும் சாகுல் அமீதுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவலும் 4.75 லட்சம் ரூபாய் அபராதமும் பசில் சாமுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவலும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை 1. 65 லட்சம் ரூபாயை வாகனக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காளிமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications