விஜய் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறதா? மாமல்லபுரம் கூட்டத்தின் பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறதா? மாமல்லபுரம் கூட்டத்தின் பின்னணி என்ன? என்று கேள்விகள் பலருக்கும் இருக்கும். இன்று கூட சிலர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதைக் காண முடிந்தது. ஆனால் உண்மையில் விஜய் ஆட்சியைக் கவிழ்ப்பது ஈஸி அல்ல. ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன என்று கூறுவதைவிட, ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களிலேயே தவெக அரசு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தடுமாறுகிறதா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது.
ஏனெனில் இந்த முதல் ஆறு மாதத்தில் பல சர்ச்சைகள் நடந்துள்ளன. அமைச்சர் சரத், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர் எனப் பல விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் விஜய்.

நெருக்கடிகள் என்ன
கட்சி நிர்வாகிகள் மீதான சர்ச்சைகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே சில பிரச்சனைகள், சட்டம்-ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எனப் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ள நிலையில் மாமல்லபுரம் கூட்டம் நடக்கிறது. பொதுவாக இது வழக்கமான ஆலோசனைக் கூட்டமாக இருக்க வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை எந்த நேரமும் எடுக்கும் என்ற சூழல், மறுபுறம் கட்சிக்குள் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விஜய் அரசின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என மூன்று விஷயங்கள் இருக்கின்றன.
வாய்ப்பே இல்லை
அதேநேரம் முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். விஜய் அரசைக் கவிழ்க்க ஏதோ ஒரு பெரிய சதி நடக்கிறது என்பதுபோல் செய்திகள் உலா வருகின்றன. அதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. ஆனால் விஜய்யின் ஆட்சிக்கு ஆபத்தே இல்லையா என்றால், நிச்சயம் ஆபத்து இருக்கிறது. அந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்து அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் விஜய் தலைமையிலான தவெக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. தேர்தலில் 108 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. ஆட்சியின் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு 144 வாக்குகளைப் பெற்றது.
ஆட்சியை கவிழ்க்க முயற்சியா
அதாவது, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பெரும்பான்மையைவிட அதிகம்தான். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து ஆதரவை மாற்ற முயற்சி நடந்ததாக தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 15 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக ஒரு தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா அண்மையில் கூறிய குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக உறுதிப்படுத்தும் அளவிற்கு வீடியோ ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் அரசியல் ரீதியாக நகர்வுகளுமே எதிர்க்கட்சிகளுக்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே இப்போதைய சூழலில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்து வருவதாக உறுதியாகக் கூற முடியாது. ஆனால் தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாகி ஒருவேளை மாறினால் தான் விஜய்க்குச் சிக்கல். அப்படி நடைபெறுவதற்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
கூட்டம் ஏன்
ஆட்சியமைத்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், இன்று மாமல்லபுரத்தில் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கிறார். இதனால் இன்றைய இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களில் சிலரது சர்ச்சையான செயல்பாடுகள், மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து எழுந்த விமர்சனங்கள், கட்சி நிர்வாகத்தில் உள்ள கட்டுப்பாடு, அரசுக்கு எதிராக அடுத்தடுத்து எழும் புகார்களை எப்படிக் கையாள்வது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். இந்தக் கூட்டத்தின் மூலம் விஜய் தனது எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார்.
என்ன பேசுவார்
கட்சியின் பெயரைச் சொல்லி யாரும் சர்ச்சைகளில் சிக்கக்கூடாது என்று விஜய் நேரடியாக எச்சரிக்க வாய்ப்பு அதிகம். மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எம்.எல்.ஏ.க்களைக் கண்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் பேச வாய்ப்பு உள்ளது. அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகளால் கோர முடியும் என்கிற நிலை இந்த மீட்டிங்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வைக்கிறது.
சட்டம் ஒழுங்கு
விஜய்க்கு முன்னால் இருக்கும் முதல் நெருக்கடி எதிர்க்கட்சிகள் கிடையாது. சட்டம்-ஒழுங்குதான். தீபாவளியின்போது ஒரே நாளில் நடந்த 8 கொலைச் சம்பவங்கள், பழிக்குப் பழியாக நடைபெறுவதாகக் கூறப்பட்ட பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சிக்கின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுமே சட்டம்-ஒழுங்கு குறித்து கவலை தெரிவிக்கின்றன. என்னதான் அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்பதே இப்போதைய கேள்வி.
இரண்டாவது நெருக்கடி கட்சிக்குள் எழும் சர்ச்சைகள்
விஜய் முதல்வரான பின்னர், தவெக நிர்வாகிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமானதாகப் புகார்கள் உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களிடையே கூட இடைவெளி அதிகமாக உள்ளதாகப் புகார்கள் உள்ளன. அதேபோல் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்கள் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. இது அவர்களின் தனிநபர் பிரச்சனையாக மட்டும் முடியாமல், ஆளுங்கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
கூட்டணி
மூன்றாவது நெருக்கடி கூட்டணிதான். 108 இடங்களைப் பெற்ற தவெக, ஆட்சியைத் தொடர்ந்து நடத்த கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் விஜய்யால் புறக்கணிக்க முடியாது.
நிர்வாகம்
நான்காவது நெருக்கடி நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் ஆகும். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம். அதேநேரத்தில் அரசின் நிதிநிலையையும் கவனிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மின்சாரம், விலைவாசி, வேலைவாய்ப்பு, மக்கள் நலத்திட்டங்கள் என அன்றாடப் பிரச்சினைகளில் அரசு தனது செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
திமுக பாஜக நகர்வு
இப்போது திமுக மற்றும் பாஜகவின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்றால், விஜய் தலைமையிலான தவெக அரசை உடனடியாகக் கவிழ்க்க முயற்சி செய்வதைவிட, அதன் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
கேலி கிண்டல்
சட்டம்-ஒழுங்கு, தேர்தல் வாக்குறுதிகள், விலைவாசி, மின்சாரப் பிரச்சனை, கூட்டணிக் கட்சிகளுடனான உறவு எனப் பல விவகாரங்களை திமுகவும் பாஜகவும் கிளப்பி வருகின்றன. இன்னும் தீவிரமாகக் கிளப்பும். விஜய் அரசு இப்படித்தான் என்று டிரெண்ட் செய்யவே விரும்புகிறார்கள். மிக மோசமாகக் கேலி, கிண்டல் செய்வதையே தொடர்ந்து செய்வார்கள்.
மோசமாக சித்தரிப்பதே நோக்கம்
மக்கள் மத்தியில் விஜய் அரசை மோசமாகச் சித்தரிப்பதே திமுக, பாஜகவின் நோக்கமாக இருக்கும். இதனை எதிர்கொள்வதுதான் இப்போதைக்கு விஜய்க்குப் பெரிய சவாலாக இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஒட்டுமொத்தமாக மாமல்லபுரம் கூட்டத்துக்குப் பிறகு விஜய் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன? கட்சிக்குள் மாற்றங்கள் வருமா? சர்ச்சைகளில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை அறியக் காத்திருப்போம்.





Click it and Unblock the Notifications
