Jana Nayagan: "முதலமைச்சர் விஜய்" ஜனநாயகன் படம் டைட்டில் கார்டு.. விஜய் ரசிகர்கள் சொன்ன மாதிரியே நடக்குதே!
சென்னை: விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தணிக்கை சான்று பிரச்சனையால் ஜனநாயகன் படம் முடங்கியுள்ள நிலையில், தேர்தலுக்கு பிறகு வந்தால் முதல் அமைச்சர் விஜய் என்று டைட்டில் கார்டு போட்டு வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் வேடிக்கையாக பதிவிட்டு வந்தனர். இதனை தற்போது விஜய் மெய்யாக்கி காட்டியிருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியது. இதனால், பொங்கல் ரிலீசுக்கு திட்டமிடப்பட்ட அந்தப் படம் தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை. தணிக்கை சான்றுக்காக நீதிமன்ற படிகள் ஏறிய பட தயாரிப்பு நிறுவனம் அங்கு சாதகமான உத்தரவு கிடைக்காததால் மீண்டும் தணிக்கை வாரியத்திடமே ரிவைசிங் கேட்டு சென்றது.

முதலமைச்சர் விஜய் என டைட்டில் கார்டு
கடந்த வாரம் மும்பையில் உள்ள மறு தணிக்கை குழு படத்தை பார்த்தது. எனினும், படத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவரவில்லை. இதற்கு மத்தியில் விஜய்யின் ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக இணையத்தில் கசிந்தது.
இப்படி விஜய்க்கு அடிமேல் அடிமேல் விழுந்த போதும், விஜய் ரசிகர்களோ தேர்தலுக்கு முன்பாக படம் வந்தால் தளபதி விஜய் என்று டைட்டில் கார்டு வரும் என்றும், தேர்தலுக்கு பின்பாக வந்தால் முதல் அமைச்சர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்றும் டைட்டில் கார்டுடன் படம் வெளியாகும் என்று பதிவிட்டு வந்தனர். விஜய் ரசிகர்கள் இப்படி பதிவிட்ட போது நெட்டிசன்கள் பலரும் அரசியல் ரீதியாக கடுமயான பதிலடியை கொடுத்து இருந்தனர்.
105 இடங்களில் தவெக முன்னிலை
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகியுள்ள விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 105 இடங்களிலும், திமுக கூட்டணி 70 இடங்களிலும், அதிமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
எனவே விஜய் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. விஜய்யின் ஜனநயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததற்கு அரசியலே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே
தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள சூழலில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே முதல் அமைச்சர் விஜய் என்றே டைட்டில் கார்டு வரும் என்று தவெகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications