ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை: ஆறுமுகசாமி
சென்னை: ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையை தான் தாமதப்படுத்தவில்லை என்றும் ஆணையத்தின் சந்தேகங்கள் அனைத்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியிருந்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஐந்து ஆண்டு காலம் விசாரணை நடத்தி 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன.

ஆறுமுகசாமி ஆணையம்
இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்த கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகம்சாமி ஆணையம் தனது விசாரணையை கடந்த 2017ஆம் முதல் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 160க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 500 பக்க அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி சமர்பித்துள்ளார்.

அறிக்கை தாக்கல் செய்ய தாமதம்
முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையை தான் தாமதப்படுத்தவில்லை என்றார். ஆணையத்தின் சந்தேகங்கள் அனைத்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

சசிகலா ஒத்துழைப்பு
எனது தனிப்பட்ட கருத்தை நான் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. சசிகலா தரப்பினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.சசிகலா நேரில் வராத காரணத்தால் எழுத்து பூர்வமாக பதில் பெறப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

எய்ம்ஸ் குழு அறிக்கை
ஜெயலலிதா மரணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் நீதியரசர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications