எடப்பாடி பலகீனமாகி விட்டார்....சசிகலா பற்றி ஓபிஎஸ் சரியாகத்தான் சொல்கிறார்...டிடிவி மீண்டும் அதிரடி
சென்னை: எடப்பாடி யாரால் முதல்வர் ஆனார் எனபது உலகிற்கே தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். பதவிக்காக நாலு காலில் தவழ்ந்து போனார்கள் யார்? காலில் விழுந்து வணங்கியது ஏன்? என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு துரோகம் செய்ததால் எடப்பாடிக்கு குற்றவுணர்ச்சி உறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நகராட்சி, மாநகராட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்களுடன் சசிகலா சந்திப்பு
சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவேன் அன்றைய தினம்தான் உண்மையான தீபாவளி என்று கூறியுள்ளாராம் சசிகலா. அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது பற்றி நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார் என்று கூறினார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான கருத்துக்கள் வெளியானது. ஓபிஎஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு கூறினார் டிடிவி தினகரன்.

ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் ஆதரவு
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், பன்னீர்செல்வம் சரியாகத்தான் பேசி இருக்கிறார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் சொன்னது நிதானமாக ஆராய்ந்து சொன்ன ஒன்று அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என டிடிவி தினகரன் மீண்டும் கூறினார்.

எடப்பாடி பலவீனம்
எடப்பாடிக்கு பதவியால் தான் பலம் கிடைத்தது. அரசியல் ரீதியாக பலவீனமாகவே உள்ளார். இது அவருக்கும் தெரியும். இதனால் தான் செய்தியாளர்களிடம் கோபத்துடனே பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

தவழ்ந்து சென்றவர் யார்?
சசிகலா ஒரு தாய் ஸ்தானத்தில் இருப்பவர். அவரை கேவலமாக விமர்சிக்கிறார் எடப்பாடி. பதவிக்காக நாலு காலில் தவழ்ந்து போனவர்கள் யார்? காலில் விழுந்து வணங்கியது ஏன்? நாய் கூட நன்றியுள்ள பிராணி. அதனுடன் கூட எடப்பாடியை ஒப்பிடக் கூடாது. எடப்பாடி யாரால் முதல்வர் ஆனார் எனபது உலகிற்கே தெரியும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

சசிகலாவிற்கு துரோகம்
சசிகலாவுக்கு துரோகம் செய்ததால் எடப்பாடிக்கு குற்றவுணர்ச்சி உறுத்துகிறது. குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். அதனால் தான் இப்படியெல்லாம் எடப்பாடி பேசிக் கொண்டிருக்கிறார். அம்மா ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. திமுக கிளப்பிவிட்ட பொய் பட்டிதொட்டியெல்லாம் பரவிவிட்டது. அதனை ஓபிஎஸ், எடப்பாடியும் கையிலெடுத்துக் கொண்டு அதனை பரப்பினார் என்றும் கூறினார்.

இழுத்து மூடுங்கள்
என்னை கேட்டால் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை இழுத்து மூடுவது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார் டிடிவி தினகரன். பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒ.பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறினார் டிடிவி தினகரன். அவர் ராவணிடம் சேர்ந்தது அவருக்கும் பிரச்னை நாட்டுக்கும் பிரச்னை என்று கூறியிருந்தார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications