உசிலம்பட்டியில் நடமாடும் தங்க நகைக்கடையாக சுற்றிய நபர்.. இரவோடு இரவோக தூக்கி சென்ற ஆந்திர போலீஸ்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடமாடும் தங்க நகைக்கடையாக சுற்றிய ஜெயபால், வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்து வருகிறார். இவர் முறுக்கு வியாபாரம் செய்து வருவதுடன், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. கழுத்தில் அதிக எடையில் தங்கச்சங்கிலிகளை அணிந்து எப்போதும் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்துள்ளார். இவரை இரவோடு இரவாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு கஞ்சா அதிக அளவில் கடத்தி வரப்படும் மாநிலம் என்றால் ஆந்திரா தான். ஆந்திராவில் இருந்தே சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்படுகிறது. ஆந்திராவில் ஒரு சில பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிப்படுகிறது. குறிப்பாக விசாகப்பட்டினத்தின் உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெருமளவில் கஞ்சா சாகுபடியையே சார்ந்து இருக்கிறார்கள். அது சட்டவிரோதமானது என்று அவர்களுக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் காவல்துறையும் மாநில அரசும் கஞ்சா சாகுபடியை அழிக்க நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் முற்றிலும் தடுத்து நிறுத்த முடிவது இல்லை..

இப்பகுதியில் பயிரிடப்படும் கஞ்சா அவர்களுக்கு உறுதியான நல்ல வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆனால், ஆந்திரப் பிரதேச காவல்துறை கஞ்சா சாகுபடிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் இன்றும் சரி செய்ய அம்மாநில அரசால் முடியவில்லை.. ஏனெனில் இன்று நேற்று இல்லை. பல ஆண்டுகளாக மக்கள் பயிரிட்டு வருகிறார்கள். பாமர மக்கள் மற்றும் வறுமையில் வாழும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை செய்து வருவதால், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் குறையாமல் உள்ளது.
இந்த சூழலில் ஆந்திராவில் முறுக்குபோடும் தொழில் செய்வதற்காக சென்றநபர், அங்கு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் குவித்ததாக புகார் எழுந்துள்ளது. எப்போதும் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகையுடன் வலம் வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கன்னியம்பட்டியை சேர்ந்த 46 வயதாகும் ஜெயபால் என்பவர் வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்ய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு முறுக்கு போடும் தொழிலுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கழுத்தில் அதிக எடையில் தங்கச்சங்கிலிகளை அணிந்து எப்போதும் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்துள்ளாராம்.
இந்நிலையில் முறுக்கு வியாபாரி ஜெயபால் கடந்த 2-ந்தேதி 313 கிலோ கஞ்சா கடத்தியதாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் தாகதத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயபால் தலைமறைவு ஆனதால் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது அவர் உசிலம்பட்டிக்கு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆந்திர மாநில போலீசாரும், உசிலம்பட்டி போலீசாரும் ஜெயபாலின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். தொடர்ந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தார்கள். பின்னர் அவரை ஆந்திராவுக்கு அழைத்து சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கை அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
