வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி... பாஜக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் -காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாகுறை நிலவும் சூழலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.

மேலும், பாஜக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

K.S.Azhagiri says, The people will not forgive the BJP government

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் உருவாக்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ஏற்கனவே ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் வி.கே. சிங் தமது டிவிட்டர் பதிவில், 'என் சகோதரருக்கு காசியாபாத் மருத்துவமனையில் இடம் கிடைத்திட உதவுங்கள்' என்று உத்தரபிரதேச மாவட்ட ஆட்சித் தலைவரை கெஞ்சுகிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இவர் காசியாபாத் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரின் சகோதரருக்கே இந்த கதி என்றால், சாதாரண குடிமக்களின் அவலநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டு, ஏப்ரல் வரை 13 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 9 சதவிகிதம் ஆகும். ஆனால், இந்திய மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு 7 கோடி தடுப்பூசிகளை பா.ஜ.க. அரசு ஏற்றுமதி செய்ததை எவருமே மன்னிக்க மாட்டார்கள்.

K.S.Azhagiri says, The people will not forgive the BJP government

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, 45 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தியது. ஆனால், இதுவரை 25 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம், பிரிட்டனில் இருவரில் ஒருவருக்கும், அமெரிக்காவில் மூன்று பேரில் ஒருவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நாளொன்றுக்கு 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இலக்கின்படி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். மீதமுள்ள 60 சதவிகித மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 மே மாதத்திற்குள் 145 கோடி தடுப்பூசி மருந்துகள் இந்தியாவிற்கு தேவை. ஆனால், மாநிலங்களவை குழுவின் அறிக்கையில், இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 100 கோடி முதல் 130 கோடி தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி, தடுப்பூசியை போட்டு முடிப்பதற்கு மாதம் ஒன்றுக்கு 10.5 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை.

ஆனால், இந்தியாவில் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பது தான் உண்மை. கொரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்க அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் குறைந்தது 70 லட்சம் முதல் 1 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. இன்றைய சூழலில் இந்த இலக்கை எட்ட ஒருநாளைக்கு 1 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் தேவை. அதன்படி இந்தியா முழுவதும் மாதந்தோறும் 30 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன.

மாநிலங்களவை குழு அறிக்கையின்படி, சீரம் நிறுவனம் மாதந்தோறும் 7 கோடி முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகள் தயாரிக்கவும், பாரத் பயோடெக் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 6 கோடி தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதம் ஒன்றுக்கு 15 கோடி முதல் 16 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும். இத்தகைய உற்பத்தி திறனை வைத்துக் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடல் இல்லாத நிலையில், பா.ஜ.க. அரசு கொரோனாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? கொரோனாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற எத்தகைய ஏற்பாடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன ?

கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருக்கிற அதே நேரத்தில், பா.ஜ.க. அரசு, கடுமையான பாரபட்ச அணுகுமுறையை கையாண்டிருப்பது தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, ஏப்ரல் 12 நிலவரப்படி, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு 1794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநாளில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த போர்பந்தர் மாவட்டத்தில் 1 லட்சம் மக்களுக்கு 25,615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், போர்பந்தர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 12 அன்று, 1 லட்சம் மக்கள் தொகையில் 135 பேர் தான். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1340 பேர். 10 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை விட, போர்பந்தர் மாவட்டத்திற்கு 14 மடங்கு தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது. இத்தகைய அப்பட்டமான பாகுபாட்டிற்கு காரணம் குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதாலா ? ஏன் இந்த பாகுபாடு ? தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா ?

கொரோனா தொற்று முதல் அலையின்போதே, சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இன்று 10 ஆயிரம் நோயாளிகளுக்கு 9 மருத்துவமனைகளும், 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் குறிப்பிடத்தக்க சுகாதார காப்பீட்டை பெறவில்லை. சுமார் 68 சதவிகித இந்திய மக்களுக்கு சரியான சிகிச்சையோ, அத்தியாவசிய மருந்துகளோ கிடைப்பதில்லை. சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் அதிகரிக்கப்படவில்லை. 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 2021 ஏப்ரல் வரை 13.3 கோடி தடுப்பூசிகள் தான் போடப்பட்டுள்ளது. தனிநபர் நோய்தடுப்பு மருந்துகளில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

K.S.Azhagiri says, The people will not forgive the BJP government

கடந்த கால கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பேரழிவையும் குறித்து, மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதற்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் நடந்து கொண்ட அணுகுமுறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீண்டகால விவாதங்களுக்கு பிறகு, கடந்த 2020 அக்டோபர் 21 அன்று 162 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ.202 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலையங்கள் தொடங்குவதற்கு நிதியை ஒதுக்குவதில் காலதாமதம் செய்த காரணத்தால் அவற்றால் உரிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதில், பல நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை. இதனால், மாதத்திற்கு 4500 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. அதை ஈடுகட்ட மத்திய பா.ஜ.க. அரசு தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், தனி ரயில்களில் மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பவும் முடிவு செய்திருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள். அதைத் தான் இன்றைக்கு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

கொரோனாவின் கொடிய இரண்டாவது அலையை மக்கள் எதிர்கொண்டிருக்கிற அவலநிலையில், பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் 30 லட்சம் பேர் நீராடியிருக்கிறார்கள். அங்கே அப்பட்டமான கொரோனா விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்களை மாதக் கணக்கில் புனித நீராட பா.ஜ.க. அரசு எப்படி அனுமதித்தது ? தப்லிக் ஜமாத்தை 'கொரோனா ஜிகாத்' என்று குற்றம் சாட்டிய பா.ஜ.க., கும்ப மேளாவில் 30 லட்சம் பேரை நீராட அனுமதிக்கலாமா ?

K.S.Azhagiri says, The people will not forgive the BJP government

இத்தகைய கொடூரமான நிலை நாட்டில் நிலவுகிற போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்கள் நலனில்அக்கறை கொண்டு தமது மேற்குவங்க தேர்தல் பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். ஆனால், தங்களது தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து மேற்கொள்வது இந்திய மக்களின் உயிரை துச்சமென மதித்து, ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் பரப்புரை மேற்கொள்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொறுப்பற்ற பிரதமரை இந்த நாடு பெற்றிருப்பதால் கடுமையான பாதிப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் இந்திய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அனைத்து துன்பங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிதான் காரணம் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.

எனவே, இந்திய மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் பிரதமர் மோடி உடனடியாக ஈடுபடவில்லையெனில், பா.ஜ.க. அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+