1.5 லட்சம் ரூபாய் ஐஃபோன்! பாறைகளின் நடுவே நழுவ விட்ட பெண்! என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: கேரள கடற்கரையில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஃபோனை தவறவிட்ட பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா பெண் ஒருவர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காகக் கேரளாவுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். இயற்கைக் காட்சிகள் துள்ளிக் குதிக்கும் மாநிலத்தில் மனதிற்குச் சந்தோஷம் அளிக்கும் இடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்த அந்த இளம் பெண் கேரள கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கிக் கொண்டிருந்தார்.

நண்பர்களோடு குஷியாகக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தவர் கை தவறி தனது 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஃபோனை கடற்கரை ஓரமாக அலைகளைத் தடுப்பதற்காகக் கொட்டி வைக்கப்பட்டிருந்த பாறை குவியல்களுக்கு இடையில் போட்டுவிட்டார்.
பாறை சந்து பக்கமாக உள்ளே விழுந்த ஐஃபோனை எடுக்க முடியவில்லை. பாறைகள் நடுவே கைகளை எட்டும் அளவுக்கு விட்டும் ஃபோனை எடுக்க முடியவில்லை.
சரி, பாறைகளை நகர்த்தி விட்டு எடுத்துவிடலாம் என அவருடன் வந்த இளைஞர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு பாறையும் தூக்க முடியாத அளவுக்குப் பெரிது பெரிதாக இருக்கவே, அவர்களால் சின்னதாகக்கூட அசைக்க முடியவில்லை.
அவ்வளவுதான் 1.5 லட்சம் ரூபாய் ஐஃபோன் கை நழுவிப் போய்விட்டது என்று அச்சத்தில் அரண்டு போய் உட்கார்ந்துவிட்டார் கர்நாடகா பெண். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பாறைகள் மீது அடிக்கடி பெரிய அலைகள் வந்து மோடி, கடல்நீர் வேறு பாறை சந்துகளில் வழிந்தோடி உள்ளது. ஆகவே, ஐஃபோன் நனைந்து வீணாகிவிடும் என்று இன்னொரு பக்கம் மன அழுத்தம் அவரை ஆட்கொண்டுள்ளது.
கேரள சுற்றுலாவை இன்பமாக அனுபவிக்கலாம் என ஆசையோடு வந்த அந்தக் குழுவுக்கு இது மிகப்பெரிய அடியாக இருந்துள்ளது. ஏனென்றால், யாருடைய எண்களும் அந்தப் பெண்ணுக்கு நினைவில் இல்லை.
வீட்டிலிருந்து அழைப்புகள் வந்தால், பதிலளிக்க முடியாது. கூடவே தானும் யாருடனும் பேசவும் முடியாது. ஆகவே சோர்ந்து போய் நின்ற அந்தப் பெண்ணுக்கு என்ன செய்வது எனத் தவித்த போது திடீரென்று அந்தச் சுற்றுலா குழுவுக்கு ஒரு யோசனை பொறிதட்டியுள்ளது.
உடனடியாக கேரளா தீயணைப்புத்துறையின் உதவியை நாடியுள்ளனர். இவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் வாகனத்துடன் சில உபகரணங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
மிகப்பெரிய முயற்சிகளுக்குப் பின்னர் பாறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி, இடுக்குகளில் உள்ளே சென்று ஐஃபோனை தேடியுள்ளனர்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் அண்டிலியா சேலட் குழு பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர் அந்தப் பெண்ணின் நண்பர்கள். "எங்களுடன் அறையில் தங்கியிருந்த கர்நாடக பெண்ணின் 1,50,000 மதிப்புள்ள ஐஃபோன் கடற்கரையில் கொட்டிக் கிடந்த பெரிய பாறைகளுக்கு இடையில் விழுந்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தாலும், மீட்டெடுக்க முடியவில்லை" என்று ஒரு பதிவைப் போட்டுள்ளனர்.
அது மேலும் கூறுகிறது, "பல கட்ட முயற்சிகளில் இறங்கியும் எங்களால் மீட்டெடுக்க முடியவில்லை. பலத்த அலைகள், காற்று கூடவே மழையும் பெய்ததால் நிலைமையைச் சவாலாக மாற்றியது.
எவ்வளவோ சாதகம் இல்லாத சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கேரள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் மொபைல் ஃபோனை மீட்க 7 மணிநேர முயற்சி செய்தனர். இறுதியாக ஐஃபோனை மீட்டு ஒப்படைத்தனர். இதற்கு உதவிய சுஹைல் மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 1.6 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் அதைப் பார்த்துள்ளனர். கூடவே பல்வேறு பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன.
அந்தப் பின்னூட்டத்தில் ஒருவர், "இதற்குப் பதிலாக அந்தப் பெண் ஐஃபோனை காப்பீடு செய்திருக்க வேண்டும்" என்று ஐடியா கொடுத்துள்ளார்.இன்னொருவர், "தீயணைப்புத் துறையைப் பாராட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"கேரள தீயணைப்பு படையை நேசிக்கிறேன். நான் கர்நாடகாவைச் சேர்ந்தவன்" என்று மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications