திடீர் மழையால் முண்டியடித்த மக்கள்! கொல்கத்தா கூட்டநெரிசல் நடந்தது என்ன? நேரில் பார்த்த மக்கள் பகீர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன? நிகழ்விடத்தில் ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டு இருந்ததா? என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் பகிர்ந்துள்ளனர். பந்தலின் பாதையும் வெளியேறும் பகுதியும் குறுகலானதாக இருந்ததாகவும் போதிய விளக்கு வசதி கூட இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான துர்கா பூஜா நிகழ்ச்சி களை கட்டியுள்ளது.

நேரில் பார்த்தவர் பேச்சு
தலைநகர் கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜா நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், பந்தலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென மழை பெய்யவே கூட்டம் அங்கும் இங்கு கலைந்துள்ளது. மக்கள் முண்டியடித்துக்கொண்டு பந்தலுக்குள் செல்ல முயன்றதில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகினர்.
காயம் அடைந்து பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது? என்பது குறித்து நேரில் பார்த்தவர் கூறிய திடுக்கிடும் தகவல் வருமாறு:-
நான் எப்படியோ தப்பிவிட்டேன்..
துர்கா பூஜா பந்தலின் நுழைவுப்பகுதி மிகவும் குறுகலானதாக இருந்தது. வெளியேறும் பகுதியும் மிகவும் குறுகலானதாகவே இருந்தது. அங்கு விளக்கு வசதி எதுவும் செய்யப்படவில்லை. பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் அங்கு திரண்டு இருந்த மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. குறுகலான தெருக்களை கொண்ட அந்த பகுதியில் மக்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
மழை பெய்து கொண்டிருந்தது. எப்படியாவது பந்தலுக்குள் சென்றுவிட வேண்டும் என்று மக்கள் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். குறுகலான பாதை என்பதோடு இருளும் சூழந்து இருந்தது. ஒரு விளக்கு கூட இல்லை. இருள் காரணமாக இரண்டு பேர் தவறி விழுந்தனர். நான் கூட விழுந்துவிட்டேன். நெரிசலில் சிக்கி எனது மகளும் பேத்தியும் காயம் அடைந்தனர். நான் எப்படியோ தப்பிவிட்டேன்.
Stampede at Chorbagan Durga Puja pandal in Kolkata...😞🥺 https://t.co/a2RUg8pW1L
— Alok (@alokdubey1408) October 17, 2026
மழை பெய்ததது தான் காரணம்
மிகவும் பயந்துவிட்டேன். கீழே விழுந்தவர்கள் மீது பலரும் மிதித்துவிட்டனர். இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அங்கு ஒரு தன்னார்வலரோ போலீசாரோ இல்லை. ஏற்பாடுகளே இல்லை" என்றார். மற்றொரு நபர் கூறுகையில், 'நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக பைக்குகளில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மழை பெய்ததால் மக்கள் பந்தலுக்குள் செல்ல முற்பட்டனர்' என்றார்.
இதற்கிடையே, மேற்கு வங்க அரசு உதவி எண்களை எளித்துள்ளது.
18003455678 என்ற எண்ணில் தொடபு கொள்ளலாம். என்றும் தேவையின்றி அச்சப்பட வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. கொல்கத்தா போலீசார் வெளியிட்ட உதவி எண் விவரம்: 03322141310.




Click it and Unblock the Notifications
