ஓபிஎஸ்-ஐ கீழே தள்ளுகிறார் தனியரசு.. அப்பட்டமான பொய்.. நம்பாதீங்க! எடப்பாடிதான் "தல"- கொங்கு ஆறுமுகம்
சென்னை : கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு ஊடக வெளிச்சத்தில் தன்னை காட்டிக்கொள்ள ஓபிஎஸ்ஐ குழியில் தள்ளும் வேலையை செய்கிறார் எனவும், எடப்பாடியார் தலைமையில் தான் கட்சி செல்லும் என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அஇஅதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோரிக்கையானது தமிழக மக்கள் அனைவரும் உற்று நோக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 5வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை பலரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அவரது தலைமையில் தான் அதிமுக செயல்பட வேண்டும் என கூறியிருந்தார்

தனியரசு ஆதரவு
இந்நிலையில் தனியரசு ஊடக வெளிச்சத்தில் தன்னை காட்டிக்கொள்ள ஓபிஎஸ்ஐ குழியில் தள்ளும் வேலையை செய்கிறார் என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா என்று மாபெரும் ஆளுமைகளால் வழி நடத்தப்பட்ட மக்கள் இயக்கம் இன்று சரியான தலைமை யார் என்பதை தேர்வு செய்வதில் சிறிய சலசலப்பை சந்தித்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவை பெற்று, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலேயும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தி, கட்சியையும் வழி நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான தலைவராக இருப்பார்.

எடப்பாடி பழனிசாமி
நிர்வாகிகளின் அன்பையும், ஆதரவையும் பெற்ற எடப்பாடியாரை தான், பெரும்பான்மையான மக்களும் ஆதரிக்கின்றனர். இதை கூட அறிந்து கொள்ளாமல் கொங்கு மண்டலத்தில் எடப்பாடியார்க்கு செல்வாக்கு இல்லை என தனியரசு கூறுவது அப்பட்டமான பொய், அதை கூட சரியாக விசாரித்து சொல்ல ஒரு நபர் கூட கிடைக்காத பரிதாப நிலையில் தான் தனியரசு உள்ளார். ஏற்கனவே கட்சியே இல்லாமல் அரசியல் செய்வதாக, பெரிய நகைச்சுவை செய்து வரும் தனியரசு தற்போது கொங்கு மண்டல பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி கொள்ள இதில் முயல்கிறார். தனது பகுதி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு அரசியலில் அரைவேக்காடு என்ற பெயரெடுத்த தனியரசு எடப்பாடியாரை சொந்த தொகுதியில் செல்வாக்கு இல்லை என்று விமர்சிப்பது வேடிக்கை தான்.

அதிமுக தலைமை
எடப்பாடியார் முதல்வராக இருந்த போது தனியரசு தான் அதிகமாக அவரை புகழ்ந்தார். இவர் சின்னம்மா, டிடிவி என மாறி மாறி துண்டை போட்டு வைப்பார், யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார். எடப்பாடியார் ஏற்கனவே இவரை நிராகரித்து விட்டதால் வேறு வழியின்றி ஓபிஎஸ் க்கு ஆதரவாக வழிய சென்று கருத்து சொல்கிறார். தனியரசு ஓபிஎஸ்-ஸிடம் எதாவது ஆதாயம் கிடைக்குமா என ஆதரித்து வருகிறார். எதுவும் கிடைக்காது என தெரிந்தால் அமைதியாகி விடுவார். அவ்வளவு தான் தனியரசு அரசியல். எடப்பாடியாரோடு நேரடி போட்டியாளராக ஓபிஎஸ்-ஐ ஒப்பீடு செய்வதே கள எதார்த்தத்திற்கு முரணானது. எடப்பாடியார் தலைமையில் தான் கட்சி செல்லும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications