நாட்டிலேயே முதல் முறை.. போலி பத்திரப்பதிவு விவகாரம்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை: மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
போலி பத்திரங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரபதிவிற்கு ஆதார் கார்டை கட்டாயமாக்கிய அரசு, நிலத்தின் உரிமையாளர்கள் தான் விற்கிறார்களா என்பதை கண்காணிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறது. ஆனால் அதேநேரம் சிலர் உயிரிழந்தவர்களின் சொத்துக்களை தங்கள் பெயரில் போலியாக பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள். சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்த சம்பவங்கள் நடந்திருக்கிறது.
அண்மைக்காலம் வரை போலியாக பத்திரபதிவு நடந்தால், அதை ரத்து செய்ய நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற நிலை இருந்தது. நீதிமன்றமே பத்திர பதிவை ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கியது. இதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அதிகார பத்திரம்
சென்னை சோளிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து, அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர்.

ரத்து செய்ய உத்தரவு
இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இதுசம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால் அதை விசாரித்து, போலி என்பது கண்டறிந்தால், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவு அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

உயர்நீதிமன்றம்
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின்படி, சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை துவக்கம்
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத் திருத்தத்துக்கு பின் அளித்த இரண்டாவது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் பாராட்டு
இதையடுத்து, சொத்துக்கள் மோசடியாக எப்படி அபகரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோன்ற செயல்களை தடுக்க உயர்நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மேலும், மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Click it and Unblock the Notifications
