தமிழ்நாடு தகவல் ஆணையராக மகாலிங்கம் பொன்னுசாமி! பத்திரிகையாளர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஊடகவியலாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஊடகவியலாளர் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஊடகத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மகாலிங்கம் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில தகவல் ஆணையர்களாக எஸ். மகாலட்சுமி, டி.கே. ஷபீர், சி.பி. மீனா மற்றும் பி. மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் நாள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mahalingam Ponnusamy Named TN Information Commissioner Marking Historic First for Journalists

யார் இந்த மகாலிங்கம் பொன்னுசாமி?

கோவையைச் சேர்ந்த மகாலிங்கம் பொன்னுசாமி, கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் பட்டமும் பெற்றவர். புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சேனல்களிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி பெடரல் போன்ற ஆங்கில ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சுமார் 25 ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட ஊடகவியலாளார் மகாலிங்கம் பொன்னுசாமி, தனது கட்டுரைகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது கட்டுரைகள் அரசின் கவனம் பெற்று, பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளன.

தாக்கத்தை ஏற்படுத்திய மகாலிங்கம் பொன்னுசாமி

மகாலிங்கம் பொன்னுசாமி, 'இந்தியா டுடே' தமிழ் வார இதழில் பணியாற்றியபோது, ​​தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் குறித்து ஒரு அழுத்தமான சிறப்புச் கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை, கலைஞர் கருணாநிதி தலைமையிலான அன்றைய அரசின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. அதன் விளைவாக, முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வாழ்க்கைச் சூழலைச் சீரமைக்கவும் அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கி, விரிவான பணிகளைத் தொடங்கியது.

'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் முதன்மைச் செய்தியாளராகப் பணியாற்றியபோது, ​​ஆந்திரப் பிரதேச சிறையில் (செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளில்) பல ஆண்டுகளாக முறையான சட்ட உதவி இன்றி அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் அவலநிலை குறித்து அவர் கள ஆய்வு செய்து செய்தி வெளியிட்டார். இந்தக் கட்டுரையின் தாக்கத்தால், அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, அவர்களுக்காக ஒரு சிறப்பு வழக்கறிஞர் குழுவை அமைத்தார். இதன் விளைவாக, சிறையிலிருந்த தமிழர்கள் விரைவாக விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பத்திரிகையாளர் சங்கங்கள் வாழ்த்து

இந்நிலையில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் மகாலிங்கம் பொன்னுசாமியை, பத்திரிகையாளர் சங்கங்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளன. தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன், சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் மகாலிங்கம் பொன்னுசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளன.

தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன்

தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அரசாணையின்படி தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளர் பி.மகாலிங்கம் அவர்களுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஊடகவியலாளர் மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதும், பெருமைக்குரியதுமான நிகழ்வாகும்.

Mahalingam Ponnusamy Named TN Information Commissioner Marking Historic First for Journalists

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் நோக்கமான வெளிப்படைத்தன்மை. பொறுப்புடைமை மற்றும் நல்லாட்சியை நிலைநாட்டுவதில் தங்களது நீண்டகால ஊடக அனுபவம் பெரும் வலு சேர்க்கும் என நம்புகிறோம். தங்களது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பத்திரிகையாளர் மன்றம் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரன மகாலிங்கம் பொன்னுசாமி, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு போன்ற காட்சி ஊடகங்களிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி பெடரல் போன்ற ஆங்கில அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களிலும் தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பத்திரிகையாளராக பல்வேறு புலனாய்வு செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ள திரு.மகாலிங்கம் பொன்னுசாமி, இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் 'சர்வதேச தலைமைத்துவ திட்டத்தின்' கீழ் அமெரிக்க அரசின் விருந்தினராக மகாலிங்கம் பொன்னுசமி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல், பத்திரிகையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள்குறித்து விளக்கமளிக்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு ராணுவ தளங்களுக்கு நேரடியாக சென்றுள்ளார்.

சுமார் 25 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வந்த மகாலிங்கம் பொன்னுசாமி தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உளமகிழ்கின்றது.

அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் தகவல் ஆணையத்திற்கு ஒரு பத்திரிகையாளரை ஆணையராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் மனதார பாராட்டுகிறது. மகாலிங்கம் பொன்னுசாமி அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உளமகிழ்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+