கூகுள் போட்டோசுக்கு கட்டணம் உட்பட.. இன்று முதல் மாறப்போகும் 8 முக்கிய விஷயங்கள்.. கவனிங்க மக்களே
சென்னை: உங்கள் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்களில் ஜூன் 1ம் தேதியான இன்று முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
கூகுள் போட்டோக்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக இருக்கட்டும், காஸ் சிலிண்டர் விலை நிர்ணயமாக இருக்கட்டும், விமான கட்டண உயர்வாக இருக்கட்டும் ஏகப்பட்ட மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

பிஎப் பணம் வேண்டுமா
புதிய EPFO விதிமுறைப்படி, ஒவ்வொரு பலனாளியும், தங்கள் பிஎப் அக்கவுண்ட்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இதை வலியுறுத்த வேண்டும். ஜூன் 1ம் தேதிக்கு பிறகும் இவ்வாறு இணைக்கவில்லை என்றால், நிறுவனங்கள் பிஎப்புக்கு வழங்கும் தொகை நிறுத்தப்படும். எனவே ஊழியர்களே, உங்கள் தலைமையை உடனே தொடர்பு கொண்டு விளக்கம் பெறுங்கள்.

பேங்க் ஆப் பரோடா ரூல்ஸ்
பேங்க் ஆப் பரோடா தனது காசோலை பரிவர்த்தனை விதிமுறைகளை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல், பாசிட்டிவ் பே கன்பர்மேஷன் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, ரூ.2 லட்சத்துக்கு மேல் காசோலை பரிவர்த்தனை செய்தால் வாடிக்கையாளர்களின் விவரங்களை வழங்க வேண்டியிருக்கும். இந்த பணி நிறைவடையவில்லை என்றால், காசோலை ரத்து செய்யப்படும்.

வருமான வரித்துறை வெப்சைட்
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இ-வரி தாக்கல் வெப்சைட் தளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது, ஏனெனில் வரித் துறை புதிய நவீன தளத்திற்கு மாற்றம் செய்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய வலைத்தளம் http://INCOMETAX.GOV.IN ஜூன் 7 ஆம் தேதி முதல் தொடங்கும்.

யூடியூப் கட்டணம்
எல்லா யூடியூபர்களுக்கும் பொருந்தாது என்றாலும், நீங்கள் ஒரு இந்திய யூடியூபராக இருந்தால், உங்களுக்கு இது பொருந்தும். நீங்கள் அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து வியூஸ் பெறுவீர்கள், அப்படியானால், உங்கள் வருவாய்க்கு (அமெரிக்க பார்வையாளர்களால் கிடைப்பது) 15 சதவீத வரி உங்களுக்கு போடப்படும்.

விமான டிக்கெட் விலை ஏற்றம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 28) உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்களுக்கான குறைந்த வரம்பை 15% அதிகரித்துள்ளது. கட்டண உயர்வும் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
உள்நாட்டு விமானங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 13-15% அதிகரிக்கப்படும். கொரோனா காலத்தில் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்கள்
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் மாதத்தில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்படும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமும் இதில் அடங்கும். இத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்கிறது.

கூகுள் போட்டோஸ்
கூகுள் போட்டோஸ் வசதி மூலம் நிறைய போட்டோக்களை சேமித்து வைத்திருப்போம். ஆனால் அதற்கு ஜூன் 1ம் தேதி முதல் பணம் வசூலிக்கப்போகிறது கூகுள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 4 டிரில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆனால், தற்போதுவரை பதிவேற்றம் செய்யப்பட்ட உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதிக்கு பிறகு அதிகபட்சம் புதிதாக 15 ஜிபி அளவுக்கு போட்டோ அல்லது வீடியோ பதிவேற்றம் செய்யலாம். அதற்கு மேலே பதிவேற்றம் செய்தால், 100 ஜிபிக்கு ஒரு மாதத்திற்கு 1.99 டாலர் என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். high-quality போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். சாதாரண ரெசலூசனில் சேமித்தால் கட்டணம் தேவையில்லை.

சமையல் எரிவாயு விலை
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்துக்கான சிலிண்டர் விலை இன்று நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், மக்களிடையே தற்போது பணத்தட்டுபாடு பிரச்சினை நிலவுவதால் விலைக் குறைப்பு இருக்குமா என்பதே எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications