காதலன் ஏமாற்றுக்காரன் எனத் தெரிந்தால் விலகிவிட வேண்டும்! அமைச்சர் கீதாஜீவன் அளித்த அட்வைஸ்!
சென்னை: காதலன் ஏமாற்றுக்காரன் எனத் தெரிந்தால் அடுத்த நொடியே அந்த நபரை விட்டு விலகிச்சென்று விட வேண்டும் என இளம்பெண்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதைவிடுத்து வேண்டாம் என்று சொல்கிற நபரோடு தான் வாழ்வேன் என பிடிவாதம் பிடித்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழந்துவிடக் கூடாது என அவர் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

புத்தகம் வெளியீடு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னாள் சமூகநல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், பெரும்பாலான ஆண்கள் மது மயக்கத்தில் இருந்து வருவதாகவும் காதலன் ஏமாற்றுக்காரன் எனத் தெரிந்தால் கவலைப்படாமல் அந்த நபரை விட்டு பெண்கள் விலக முன்வர வேண்டும் எனக் கூறினார்.

வருந்தக் கூடாது
வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணம் செய்வதை விடுத்து ஏமாற்றுக் காதலனை நினைத்து பெண்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கக் கூடாது என புத்திமதி தெரிவிக்கும் வகையில் பேசினார். பெரியார் கருத்துக்களை பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், திருமணத்திற்கு முன்பே உதாசீனம் செய்யக்கூடிய நபர்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ்க்கை நடத்துவார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் எனக் கோரினார்.

பெண்களுக்கு தைரியம்
வாழ்க்கையில் சாதிக்க இன்னும் எவ்வளவோ உள்ள நிலையில் காதலித்து ஏமாற்றுவோரை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கக் கூடாது என கறாரான முறையில் அறிவுரை வழங்கினார். பெற்றோர் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவனின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதனிடையே தூத்துக்குடியில் ஏமாற்றுப்பேர்வழி ஒருவரை தனக்கு தெரிந்த ஒரு பெண் ஒருவர் திருமணம் செய்ய காட்டிய பிடிவாதம் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார் அவர்.












Click it and Unblock the Notifications