மதுரை சின்னப்பிள்ளை! சட்டசபையில் உளறிக் கொட்டிய கீர்த்தனாவுக்கு சரமாரி 'குட்டு’
சென்னை: மதுரை சின்னப்பிள்ளை ஓ-ரிங் கருவி கண்டுபிடித்தார்; பிரதமராக இருந்த வாஜ்பாய் சின்னப்பிள்ளை வீட்டுக்கு போய் காலில் விழுந்தார் என்று தமிழக சட்டமன்றத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, உளறிக் கொட்டி இருப்பது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் அமைச்சர் கீர்த்தனா கடந்த 25-ம் தேதி பேசும் போது, மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் லீக்காமல் இருக்க ஓரிங் என்பதை கண்டுபிடித்தார். அவர் மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்தார். இதனால் அவரது வீட்டுக்கே சென்ற அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மூதாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டார்" என பேசியிருந்தது தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

காரணம் கீர்த்தனா குறிப்பிடுவது போல் மதுரை சின்னப்பிள்ளை எதையும் கண்டுபிடிக்கவில்லை. மிகவும் சாதாரணமான கிராமத்து மூதாட்டி. மதுரை அழகர்கோவில் கள்ளந்திரி கிராமத்தில் பிறந்த சின்னப்பிள்ளை, பில்லுச்சேரியில் வசிக்கிறார்.
கிராமப் பெண்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உருவாக்கியவர்; களஞ்சியம் தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் மேம்பாட்டுக்கு பணியாற்றியவர். இதற்காக 2000 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை 2001-ல் ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளைக்கு வழங்கினார். இந்த விழாவில்தான் சின்னப்பிள்ளையின் காலை தொட்டு பிரதமர் வணங்கினார். உடனே சின்னப்பிள்ளை அதிர்ச்சி அடைந்து காலில் விழுந்த வாஜ்யபாயின் கைகளை பிடித்துக் கொண்டார்.
சின்னப்பிள்ளை வீட்டுக்கு எல்லாம் வாஜ்பாய் போகவில்லை. அப்படி சின்னப்பிள்ளை வீட்டுக்குப் போனது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்தான். 2019-ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதும் பெற்றார் சின்னபிள்ளை. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது ரூ1 லட்சம் பொற்கொழி வழங்கப்பட்டது. முதல்வராக ஸ்டாலின் இருந்த போது கலைஞர் கனவு இல்ல திட்ட வீடு தரப்பட்டது.
இது போல் சமூக ஆர்வலராக அறியப்பட்ட மதுரை சின்னப்பிள்ளை ஓ-ரிங் கண்டுபிடித்தவர் என்று தவறான கருத்தை கீர்த்தனா தெரிவித்ததும் அதற்கு மற்றவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமல் தலையசைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனாவின் தவறான தகவல்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதில் முன்னாள் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், சின்னப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. மாறாக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் தான் வயதில் தன்னைவிட இளையவரான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு வாஜ்பாய் வணங்கினார். இந்நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கிராம மக்களிடையே, 'களஞ்சியம்' என்ற பெயரில், மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி நடத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக, சின்னப்பிள்ளை அவர்களுக்கு 'ஸ்திரீ சக்தி' என விருது வழங்கப்பட்டது என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டமன்றத்தில் முற்றிலும் தவறான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். ஹைட்ரோக்ளோரிக் சிஸ்டத்திற்கான ஓ-ரிங் உதிரிப்பாகத்தை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி தயாரித்ததாகவும், அதைப் பாராட்டி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்றும் அமைச்சர் பேசியுள்ளார். உண்மையில், இது முற்றிலும் தவறான செய்தி.
கிராமப்புறப் பெண்களை ஒருங்கிணைத்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வழியாகச் சிறுசேமிப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் சாத்தியமாக்கியவர் தான் மதுரை சின்னப்பிள்ளை. அவரின் இந்தப் பங்களிப்பிற்காகவே அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடமிருந்து ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். அந்த நிகழ்வின்போதே வாஜ்பாய் அவர்கள் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். வேடிக்கை என்னவென்றால், இது பொய் என்று தெரிந்தும் கூட, முன்னணி ஊடகங்கள் பலவும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசியமான தகவல் என்று இதையே செய்தியாக மாற்றியிருக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
