என்ன பண்ணணும்னு அரசுக்கு தெரியாதா? அற்ப ஆசைக்காக ஏன் இந்த வேலை..? அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர்!
சென்னை : பிரதமருக்கு பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு வழங்கிய பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார். திமுக அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், அண்ணாமலையின் புகாரை விமர்சித்து வருகின்றனர்.
உரத்தை போதைப்பொருள் என்ற பாஜக.. நம்பிய எடப்பாடி! கொக்கைன் கடத்தினாரா திமுக கவுன்சிலர்? வெளியான உண்மை

அண்ணாமலை புகார்
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை, மெட்டல் டிடெக்டர் கருவி வேலை செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து நேற்று புகார் அளித்தார் அண்ணாமலை. பிரதமர் தமிழகம் வந்தபோது எவ்வித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என டிஜிபி சைலேந்திர பாபு இன்று விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பதிலடி
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாட்டில் பாஜக ஆளும் பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு உள்ளது. அண்ணாமலை போன்று வெறுப்பு பிரச்சாரம் செய்வர்களுக்கு கூட பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா? என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும். அற்ப ஆசைக்காக செய்யக்கூடிய விளம்பர யுக்தி தான் இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம்." எனத் தெரிவித்தார்.

அரசு தெரிவிக்க முடியாது
மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "தொழில்நுட்பம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. பல நிறுவனங்கள் வியாபார யுக்தியுடன் பல திட்டங்களை அறிவித்து வருவது போல் அரசு தெரிவிக்க முடியாது. ஏனென்றால் இது பொதுமக்கள் பணம். காலச்சூழலுக்கு ஏற்ப புதிய யுக்திகளை கையாண்டு வருகிறோம். விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவோம். அரசு கேபிள் டிவி விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆளுநர்
பாஜக மக்கள் ஆளுநரை சந்திக்கும்போது கிடப்பில் கிடக்கும் விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்க கேட்டிருந்தால் நன்றாக இருக்கும். மாநில ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் பாலமாக அமைய வேண்டும். மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு என்னென்ன செய்ய முடியும் என்று செயல்படுவதைத் தான் தலையாய பொறுப்பாக கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடப்பது வேடிக்கையாக இருக்கிறது.

கெஞ்ச வேண்ட்மா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில், கையெழுத்து வாங்குவதற்குக்கூட அவரிடம் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா எனத் தெரியவில்லை. சட்டங்களை இயற்றுவது தனிநபர் செய்யக்கூடிய வேலை அல்ல. அரசு கொண்டு வரும் சட்டத்தில் பிரச்சனை இருந்தால் மட்டும் தான் கேள்வி எழுப்ப முடியும். இல்லை என்றால் ஆளுநர் கூட சட்டத்தை தடை செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.