தமிழகத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட என்ன காரணம்.. அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட என்ன காரணம் என்று அமைச்சர் நிர்மலா குமார் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அப்படித்தான் அண்மையில் ஸ்ரீரங்கத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து ஆவேசமான பொதுமக்கள் திருச்சி-மணப்பாறை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதுடன், மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். இதையடுத்துஅதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமார் 8 மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊத்துக்கோட்டை - பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மின்சாரம் இல்லாததை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினார்கள். மின்வெட்டுப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதேபோல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள இசக்கி சுப்பையாவையும் பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக அவரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு மாவட்டம் புன்செய்புலியம்பட்டியில் இரவு நேரங்களில், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை, தொடர் மின்தடை செய்யப்படுகிறது. இதேபோல், பகலிலும் மின் வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வந்தார்கள். அத்துடன் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள ஸ்பின்னிங் மில், பனியன் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது அந்த பகுதிமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருககிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையில், 1:00 மணி நேரம் முதல் 3:00 மணி நேரம் வரை மின் வெட்டு சுழற்சி முறையில் அமல்படுத்தப்படுகிறதாம். கடந்த சில தினங்களாக, நகர்ப்புறங்களிலும், பகல் மற்றும் மாலை நேரங்களில் சுழற்சி முறையில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மின் வெட்டு தொடர்கிறதாம். இதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறதாம்.
இந்த விவாகரம் தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், "தமிழகத்தின் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் உச்சபட்சமாக 21,211 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. கடும் வெயில் தாக்கத்தால், 3,000 முதல் 5,250 மெகா வாட் வரை தினசரி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டம் தினசரி 40,000 மெகா வாட் அளவில் இருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி தான் எப்போதும் உள்ளது. தற்போது, மத்திய, மாநில அரசின் அனைத்து தொகுப்பிலிருந்தும் 10 ஆயிரம் முதல் 12,700 ஆயிரம் மெ.வாட் அளவில் தான் மின்சாரம் கிடைத்திருக்கிறது.
காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி அவ்வப்போது கை கொடுத்து வருகிறது. அனல் மின் உற்பத்தி தான் பெரும்பான்மையாக வருகிறது. தினசரி மின் தேவை 21 ஆயிரம் மெ.வாட்டாக உள்ள நிலையில், 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் தான் உற்பத்தி கிடைக்கிறது. மீதியை காற்றாலை, சூரியன், வெளி மாநில கொள்முதல் மூலம் தான் சமாளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக நுகர்வு அதிகரிப்பால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், சென்னை தவிர இதர மாவட்டங்களில், மதியம், மாலை, இரவு நேரங்களில் சுழற்சி முறையில், அறிவிக்காமல் மின் நிறுத்தம் செய்து, சமாளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி பலரும் அமைச்சர் நிர்மல்குமாரை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதற்கு விளக்கம் அளித்து மின்வாரிய துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், "காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
