மிக்க நன்றி சார்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பிரியாவிடை கொடுக்கும் திமுக ஐடி பிரிவு ஊழியர்கள்
சென்னை: தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை திமுகவில் மட்டுமல்ல அரசியலிலேயே அபூர்வமான மனிதர் என்று கூட கூறலாம்.
காரணம், இதுவரை தாம் பொறுப்பு வகித்து வந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாட்டுக்காக கட்சித் தலைமையிடம் இருந்தோ, மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்து சல்லிக்காசு கூட எதிர்பார்க்காமல் தனது பாக்கெட்டிலிருந்து எடுத்து செலவு செய்தவர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சொந்த பணத்தை செலவிடும் அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியான ஒருவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
3 சுற்றுகள்.. தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை? முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் கடிதம்

திமுக ஐடி விங்
அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் திமுகவில் தாம் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அளித்த கடிதத்தை நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு வழியாக ஏற்றுக்கொண்டார் ஸ்டாலின். இந்நிலையில் திமுக வரலாற்றில் திமுக ஐடிவிங்கின் முதல் செயலாளராக இருந்த பழனிவேல் தியாகராஜன் இதுவரை அந்த அணியின் வளர்ச்சிக்காக கட்டமைத்துள்ள கட்டமைப்புகள் நினைவுகூறத்தக்கது.

மாவட்ட வாரியாக
திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி தோற்று விக்கப்பட்டவுடன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்தார். மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்களின் சிபாரிசுகளை குப்பையில் வீசிவிட்டு உண்மையாகவே தகுதியும், திறமையும், ஆர்வமும் இருப்பவர்களை திமுக ஐடி விங் பொறுப்பாளர்களாக கொண்டு வந்தார். அதேபோல் நேர்காணல் நடத்துவதற்கான ஹோட்டல் செலவு உட்பட அனைத்தையும் தாமே தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்தார்.

விரல்நுனியில் தரவுகள்
தனக்காக எந்த நிர்வாகியும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம் என்று உறுதியாக கூறியிருந்தாராம். அண்ணா அறிவாலயத்தில் புள்ளியியல் நிபுணராக பணியாற்றிய அறிவாலயம் சிவப்பிரகாசம் மூலம் திமுக ஐடி விங்கிற்கு தேவையான அத்தனை தரவுகளையும் விரல் நுனியில் திரட்டி வைத்திருந்தார். இவர் திரட்டி வைத்திருந்த டேட்டாக்கள் பிரசாந்த் கிஷோர் டீம் தேர்தலின் போது ஈஸியாக பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருந்தது.

தனி அலுவலகம்
இதனிடையே திமுக தகவல்தொழில் நுட்ப அணிக்காக சென்னை சிஐடி நகரில் தனி அலுவலகத்தை செயல்படுத்தி வநத அவர், அங்கு பல லட்சங்களை மாதம் தோறும் ஊதியமாக சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து பணிக்கு ஆட்களை வைத்திருந்தாராம். இதேபோல் இவரது மதுரை பங்களாவிலும் திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்காக பல லட்ச ரூபாய் பொருட் செலவில் அலுவலகம் அமைத்து நடத்தி வந்தார். ஆனால், நிதியமைச்சர் என்ற பெரிய பொறுப்புடன், ஐடி நிர்வாகத்தையும் கவனிப்பது கூடுதல் சுமை என்பதால், பிடிஆர் விலகிவிட்டதாக கூறுகிறார்கள். எனவே ஐடி ஊழியர்கள் பிரியா விடை கொடுத்து வருகிறார்கள்.