Anirudh Kavya Marriage: எனது அன்பு பேத்திக்கு கல்யாணம்..எல்லோரும் வாங்க! ’குடும்ப தலைவராக’ அழைப்பு விடுத்த முக ஸ்டாலின்!
சென்னை: சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் மகள் காவியா கலாநிதி மாறன், ரவிச்சந்தர் - லட்சுமி ஆகியோரது மகனும், இசை அமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, கலைஞர் கருணாநிதி குடும்பத் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
தமிழக அளவில் அரசியல், சினிமா, தொலைக்காட்சி என பல துறைகளில் புகழ்பெற்று விளங்குவது மாறன் குடும்பம். கலைஞர் கருணாநிதியின் உறவினர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் சன் குழுமத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவரது மகள் காவியா மாறன் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருக்கிறார். கலாநிதி மாறனின் ஒரே மகள் காவியா மாறன் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே சன் நெட்வொர்க்கில் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகிறார் காவ்யா மாறன்.
சன் டிவி, சூரியன் எப்எம், தினகரன், குங்குமம், சன் நெக்ஸ்ட் ஓடிடி என பல நிறுவனங்களில் காவ்யா மாறனின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டுமல்லாது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்ஸ், சன்ரைசஸ் லீட்ஸ் போன்ற பல்வேறு கிரிக்கெட் அணிகளையும் வழிநடத்தி வருகிறார் காவ்யா மாறன்.
இந்த நிலையில் பிரபல இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கும், காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் உலாவி வந்தன. அனிருத் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தாலும், அவரது குடும்பத்தினரும் திரையுலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருபவர்கள். அவர்கள் தந்தை ரவிச்சந்திரன் ஏற்கனவே திரைப்படங்களிலும் சீரியல் தொடர்களின் நடித்தவர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சகோதரர்தான் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் ஓய். ஜி. மகேந்திரனும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே அனிருத் -காவ்யா மாறன் திருமணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் முதன் முறையாக அனிருத் -காவ்யா மாறன் திருமணம் தொடர்பான செய்திகள் தற்போது வெளி வந்திருக்கிறது. இருவருக்கும் வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பத்திரிகையை சன் குழும உரிமையாளர் கலாநிதி மாறன் தனது குடும்பத்துடன் தெலுங்கானா முதல்வர் ரேவன் ரெட்டியை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கு பிறகு தான் இந்த விவகாரம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் தலைவரான மு.க.ஸ்டாலின், அனிருத் -காவ்யா மாறன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளார்.
அந்த மடலில்,"பேரன்புடையீர், வணக்கம், வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு. எனது அன்புப் பெயர்த்தியும் முத்தமிழறிநர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா & முரசொலி மாறன் அவர்களின் பெயர்த்தியும் காவேரி & கலாநிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாநிதி மாறனுக்கும் லட்சுமி & ரவிச்சந்தர் அவர்களின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்." என கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
