சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுத்தர மக்கள் வயிறு எரிகிறது- விமான எரிபொருளைவிட பெட்ரோல் விலை அதிகம்: பாஜக அரசு மீது முரசொலி சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு கூசாமல் கூட்டிக் கொண்டே போவதால் நடுத்தர மக்களின் வயிறு எரிகிறது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி விமர்சித்துள்ளது.

முரசொலி நாளிதழில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்: பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கூசாமல் கூட்டிக் கொண்டேபோகிறது. நான்காவது நாளாக ஒரு லிட்டருக்கு 35 பைசா வரை பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டில் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. புள்ளி விபரங்களைவிட நடுத்தர வர்க் கமனிதர்களின் முகங்கள் இதனைக் காட்டுகின்றன.

கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01 ஆகவும், டீசல் ரூ.98.92ஆகவும் உள்ளது. இதுவே தில்லியில் பெட்ரோல் ரூ.105.84 ஆகவும், மும்பையில்பெட்ரோல் ரூ.111.77 ஆகவும் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், இப்போது டீசலும் பல்வேறு மாநிலங்களில் ரூ.100-ஐ கடந்து உயர்ந்துவருகிறது. தில்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டர் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது.

விமான எரிபொருள் விலையைவிட அதிகம்

விமான எரிபொருள் விலையைவிட அதிகம்

இதன்மூலம் விமானத்தை இயக்குவதை விட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது என்பது பொதுமக்களைக் கோபம் கொள்ள வைப்பதாக உள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல்ஒரு லிட்டர் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.105.95 ஆகவும் உயர்ந்து உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்த போதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. இதுதான் உண்மையான காரணம்.

கிடுகிடுவென உயர்ந்த விலை

கிடுகிடுவென உயர்ந்த விலை

மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாயைக் குறைத்தது. இது தமிழக நடுத்தர மக்களுக்கு மாபெரும் சலுகையாக இருக்கிறது. அப்படி எந்தச் சலுகையையும் ஒன்றிய அரசு இதுவரை வழங்கவும் இல்லை. அதற்கான நினைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல் விலையை 2017 ஆம் ஆண்டு முதல் தினசரி நிர்ணயம் செய்து வருகிறார்கள். அது முதல், தினந்தோறும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஜூலை 2ஆம் தேதி பெட்ரோல் விலை 100ரூபாயைத் தொட்டது. இதில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. லேசாக குறைவது போல சில நாட்கள் காட்டினார்கள். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் விலை 44 ரூபாய் 68 காசு உயர்ந்துள்ளது.

Recommended Video

    டீசல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை… அதிர்ச்சியில் வாடகை வாகன ஓட்டுனர்கள்…
    பாஜக அரசின் சாதனைதான்!

    பாஜக அரசின் சாதனைதான்!

    டீசல் விலை 41 ருபாய் 18 காசு உயர்ந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் சாதனைகளில் ஒன்றாக வேண்டுமானால் இதனைச் சொல்லலாம். இந்த விலை உயர்வுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் போல ஒன்றிய அரசு சொல்லி வருகிறது. அப்படியானால் இந்த விலை உயர்வை எதற்காக முக்கிமுக்கி நியாயப்படுத்த வேண்டும்? கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணமாகச் சொல்வார்கள். கச்சா எண்ணெயின் விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து மிகவும் குறைய ஆரம்பித்தது. கச்சா எண்ணெயின் விலை வெகுவாகக் குறைந்த போதும் பா.ஜ.க. அரசு விலையைக் குறைக்கவில்லை. அதுதான் உண்மை. கச்சா எண்ணெய் விலைக்கு பெட்ரோல் விலையைக் குறைத்து இருந்தால் 40ரூபாய்தான் இருந்திருக்கும் என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் சீனிவாசன். அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த விலை உயர்வு குறித்து விளக்கமாகச் சொல்லி இருக்கிறார். கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. கார்ப்பரேட் வரி 15 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டதால், வேறு எங்காவது வரிகளை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது என்று சொல்கிறார் அவர். இதனை ஒன்றிய அரசு தான் விளக்கியாக வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கான வரியைக் குறைத்துவிட்டு, பெட்ரோலுக்கான வரியைஉயர்த்தியிருக்கிறார்கள்."பெட்ரோலிய பாண்டுகளை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு வாங்கியிருப்பதால், அவற்றை இந்த அரசு திரும்பச் செலுத்தி வருகிறது. அதனால்தான் இவ்வளவு வரி வசூலிக்க வேண்டியிருக்கிறது" என்று பா.ஜ.க.வினர் சொல்லி வருவதிலும் உண்மை இல்லை என்கிறார் இவர்.

    பெட்ரோலிய பாண்டு மதிப்பு

    பெட்ரோலிய பாண்டு மதிப்பு

    2018 ஆகஸ்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலிய பாண்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். மொத்த பெட்ரோல் பாண்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடிகள்தான். இந்த ஆண்டுதான் அவற்றைத் திரும்பச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் ஐயாயிரம் கோடி மட்டும் தான். 2023, 2024, 2026 இல் மீதமுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடியைச் செலுத்தவேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி பெட்ரோலில் இருந்து வரியாகக் கிடைத்திருக்கிறது. 2023, 2024, 2026ல் திரும்பச் செலுத்த வேண்டிய பாண்டுகளுக்காக ஏன் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடிக்கு மேல் முன் கூட்டியே வரி வசூல் செய்கிறீர்கள்...? இந்த வருடம் வசூல் செய்யும் பெட்ரோலிய வரி யாருக்குப்போகிறது? ஒட்டுமொத்தமாகவே ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாண்டுகளைத் திரும்பச் செலுத்த வருடாவருடம் ஒரு லட்சத்து அறுபதாயிரம்கோடி வசூலிப்பது ஏன்? ஐந்து வருடத்தில் இப்படி வசூலிக்கப்படும் தொகை பத்து லட்சம் கோடி ரூபாய். எதற்காக இவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது?என்று அவர் கேட்கும் நியாயமான கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. நிதி நெருக்கடி மிகுந்த இந்தக் காலத்திலும் 3 ரூபாயை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. வரி வருவாயின் உரிமையை ஜி.எஸ்.டி. மூலமாக இழந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு செய்ய முடியுமானால் அனைத்து மாநில வரி உரிமையையும் அபகரித்த ஒரு ஒன்றிய அரசால் விலையைக் குறைக்கமுடியாதா? மனமில்லை. அதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. நடுத்தரமக்களின் வயிறு எரிகிறது! இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

    English summary
    DMK Mouthpiece Murasoli Editorial has slammed on Petrol Diesel Price Hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X