விஜய் கண்ட்ரோலில்தான் போலீஸ் இருக்கா? ரோந்தாவது போறீங்களா? தமிழ்நாட்டில் சீரழிந்த சட்ட ஒழுங்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உயிரோடு இருக்கிறதா, இல்லை அதுவும் உயிரிழந்துவிட்டதா என்ற அச்சம் இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் நெஞ்சிலும் எழுந்துள்ளது. அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தில், இப்போது தினந்தோறும் வெட்டு, குத்து, ரத்தக் களறி என அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அன்றாட வாடிக்கையாகிவிட்டன.

24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள 8 கொடூரக் கொலைகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. பகல் நேரத்திலேயே பட்டாக்கத்திகளுடன் சுற்றும் ரவுடிகள், போதையின் உச்சத்தில் பெற்ற தாயையே கொல்லும் மகன்கள், பொதுமக்கள் முன்னிலையிலேயே நிகழ்த்தப்படும் வெறிச்செயல்கள் என தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒரு பயங்கரமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

vijay tvk

போலீஸ் துறை முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? ஊருக்குள் இரவில் ரோந்தாவது போகிறார்களா?" என்று தாய்மார்களும் பொதுமக்களும் வீதிக்கு வந்து கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

ஒரே நாளில் உறைந்துபோன தமிழ்நாடு: என்னென்ன நடந்தது?

மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கடந்த ஒரே நாளில் நடந்த இந்த இரத்த வெறியாட்டங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன:

தேனியில் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27). கூலித் தொழிலாளியான இவருக்கும் சுகீர் என்பவருக்கும் இடையே பழைய முன்விரோதம் இருந்துள்ளது. டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த சுகீர், கண்ணன் கோஷ்டியினர் அங்கு வந்த சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவர் வீடு திரும்பும்போது, வழியிலேயே பைக்கில் வழிமறித்து உடைத்த பீர் பாட்டில்களால் சரமாரியாகக் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து நடத்துநர் படுகொலை

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் பகுதியில், அரசுப் பேருந்து நடத்துநரான தமிழ்ச்செல்வன் என்பவர் பணி முடிந்து இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை நடுரோட்டில் வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்தது. பொது ஊழியர்களுக்கே இந்த கதி என்றால் சாமானியனின் பாதுகாப்பு எங்கே?

சென்னையில் தாயின் கண் முன்னே நடந்த கஞ்சா வெறிக்கொலை

தலைநகர் சென்னையின் மையப்பகுதியான ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில், அஜித் என்ற இளைஞனை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது. தன் மகனைக் காப்பாற்ற தாய் அலறித் துடித்து காலில் விழுந்தும் கூட, இரக்கமின்றி தாயின் கண் முன்னாலேயே அஜித்தை துடிதுடிக்க வெட்டிக் கொன்று தப்பியோடியுள்ளனர்.

திருவண்ணாமலையில் கபடி வீரர் அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே, ஆடு திருட முயன்றதாகக் கூறி ஒரு கபடி விளையாட்டு வீரரை ஊர் மக்கள் சிலர் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

நெல்லையில் கோவில் நில தகராறு: பட்டப்பகலில் இரட்டைக் கொலை

திருநெல்வேலியில் கோவில் நிலம் தொடர்பான தகராறில், பெட்ரோல் பங்க் உரிமையாளரான டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ஆகிய இருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் கத்தியால் குத்திச் சாய்த்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த இரட்டைக் கொலை தென் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியில் தட்டிக் கேட்ட பெண் காவலர் பலி

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலைக்கு இது சான்று. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதைத் தடுத்து சமாதானம் செய்ய முயன்ற கண்ணகி என்ற பெண் தலைமைக் காவலரை மோதலில் ஈடுபட்டவர்கள் கீழே பிடித்துத் தள்ளினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுபானப் பணத்துக்காக பெற்ற தாயை தலையணையால் அமுக்கிக் கொன்ற மகன்:**
மதுபோதை குடும்பங்களை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். தனது தாய் தங்கலீலாவிடம் மகன் சிபி என்பவர் மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். தாய் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த மகன் அவரை படுக்கையில் தள்ளி, கழுத்தை நெரித்து, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

சேலத்தில் பாட்டியை தீர்த்துக்கட்டிய பேரன்

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில், மது குடிக்கப் பணம் தராத ஒரே காரணத்திற்காக, வயதான தன் சொந்த பாட்டியையே பேரன் அடித்துக் கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தூங்குகிறதா உளவுத்துறை? எங்கே போனது காவல் ரோந்து?

இந்த 8 கொலைகளையும் கூர்ந்து கவனித்தால் இரண்டு விஷயங்கள் அப்பட்டமாகத் தெரிகின்றன:
ஒன்று, பயமற்ற ரவுடியிசம். இரண்டாவது, தங்கு தடையின்றி தெருவுக்குத் தெரு கிடைக்கும் கஞ்சா மற்றும் மதுபோதை.

சென்னையின் மையப்பகுதியிலேயே தாய் கண் முன்னே கஞ்சா கும்பல் ஒரு இளைஞனை வெட்டுகிறது என்றால், அந்தப் பகுதியில் காவல் துறையின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இரவு நேரங்களில் போலீஸ் வாகனங்கள் தெருக்களில் ரோந்து போகின்றனவா, அல்லது வெறும் சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டு அப்பாவி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களா?

ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் வைக்கும் நேரடிக் கேள்விகள்

போலீஸ் உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதும், அரசின் மீதும் துளிக்கூட பயம் இல்லாததற்கு யார் பொறுப்பு? போதைப் பொருள் தடுப்பு வெறும் விளம்பரம்தானா? கஞ்சாவும் போதை மாத்திரைகளும் இளைஞர்களின் கைகளில் மிகச் சாதாரணமாகப் புழங்குவதை எப்போது அடியோடு ஒழிக்கப் போகிறீர்கள்?

ரோந்துப் பணிகள் ஏன் முடங்கின? தெருக்களிலும் சந்துகளிலும் ரவுடிகளும் போதை ஆசாமிகளும் கத்தியோடு உலவுவதை தடுக்க முறையான இரவு நேரக் காவல் ரோந்து ஏன் தீவிரப்படுத்தப்படவில்லை?

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுக்கு, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தருவதுதான் முதல் கடமை. வெறும் அறிக்கைகளோடும், பெயரளவு கைதுகளோடும் கடந்துபோகாமல், இந்த கொடூரக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இரும்புக்கரம் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! இல்லையெனில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் அவலநிலையே தமிழ்நாட்டில் மிஞ்சும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+