போக்சோ குற்றவாளிக்கு அதே கல்லூரியில் முதல்வர் பதவி வழங்குவதா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை: போக்சோ குற்றவாளிக்கு அதே கல்லூரியில் முதல்வர் பதவி வழங்கியதற்கு முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான ஜார்ஜ் ஆப்ரகாம் என்பவரை, பாதிக்கப்பட்ட அதே மாணவி படிக்கும் கல்லூரிக்கு மீண்டும் முதல்வராக நியமித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"போக்சோ வழக்கில் சிக்கியவரை மீண்டும் அதே கல்லூரியில் முதல்வராக்கியது எப்படி?" என்று சென்னை உயர்நீதிமன்றமே சம்மட்டி அடி கொடுத்துக் கேள்வி எழுப்பும் அளவிற்கு, தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத்தில் நீதியும் சட்டம்-ஒழுங்கும் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி பெற்றுத் தராமல், குற்றவாளிகள் மீண்டும் அதிகார நாற்காலியில் அமர்வதை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாலியல் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் கலாச்சாரம் தவெகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கும் புதிதல்ல. டெல்லி ஜே.என்.யு-வில் (JNU) மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் எம்.பி. விவகாரத்தில் ராகுல் காந்தி மவுனம் காப்பது போல, சென்னையில் போக்சோ குற்றவாளியான கல்லூரி முதல்வரைக் காப்பாற்ற தவெக அரசும் கபட நாடகம் ஆடுகிறது.
வெற்று வாக்குறுதிகளால் ஆட்சியைப் பிடித்த விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறார். போக்சோ குற்றச்சாட்டுக்கு ஆளான நந்தனம் கல்லூரி முதல்வர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல், மாணவிகளின் கண்ணியத்தோடு விளையாடிக் குற்றவாளிகளுக்குக் கவசமாக நிற்கும் தவெக அரசுக்கு, ஒட்டுமொத்த தமிழகத் தாய்மார்களும், பெண்களும் மிக விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளிக்கு பதவி கொடுத்த நிலையில் போதை பொருள் வழக்கில் தவெக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப் பொருளான மெத்தபெட்டமைன் 135 கிலோ , தவெகவின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவர் வீட்டில் இருந்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருட்களின் மதிப்பு ரூ 675 கோடியாகும்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
'முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு' என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், 'முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு' என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?
ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
