மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு அவசியமா? அநாவசியமா? கருத்து சொல்லுங்கள் வாசகர்களே
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக, வீதிக்கு வந்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி கொண்டிருக்கின்றன.. மருத்துவக் கனவை நிஜமாக்கும் திறவுகோலா இந்த நீட் தேர்வு? அல்லது ஏழை எளிய பிள்ளைகளின் வாய்ப்பை பறிக்கும் எட்டாக்கனியா? இப்படிப்பட்ட சூழலில், மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு உண்மையிலேயே அவசியம்தானா?
மருத்துவம் என்பது வெறும் படிப்போ அல்லது தொழிலோ மட்டுமே கிடையாது.. அது பல குடும்பங்களின் தலைமுறை ஆசையும், கனவுமாகும்... "நம்ம பையன் டாக்டராக வேண்டும்", "நம்ம பொண்ணு வெள்ளைக்கோட் போட வேண்டும்" என்று எத்தனையோ பெற்றோர் தங்களின் தூக்கத்தையே தியாகம் செய்து உழைக்கிறார்கள். ஆனாலும் அந்த மருத்துவ கல்லூரி வாசலை தொட முடிவதில்லை.. காரணம், மிகப்பெரிய படிக்கட்டாக இந்த "நீட்" தேர்வு இன்று உருவெடுத்துள்ளது.

நீட் தேர்வு அவசியம்தானா
ஆரம்பத்திலிருந்தே இந்த நீட் தேர்வை சுற்றி 2 வெவ்வேறு கருத்துகள் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டே வருகின்றன. "நீட் தேர்வு கண்டிப்பாய் தேவை" என்று ஒரு தரப்பும், "இல்லை, இப்படிப்பட்ட தேர்வே வேண்டாம்" என்று இன்னொரு தரப்பும் தங்களின் நியாயங்களை எடுத்து வைக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவர்கள் சொல்லும் முதல் விஷயம் என்ன தெரியுமா? அலைச்சலும் செலவும் மிச்சம் என்பதுதான்! முன்னாடியெல்லாம் ஒரு மாணவர் டாக்டராக வேண்டுமானால், தமிழ்நாட்டில் ஒரு நுழைவு தேர்வு, புதுச்சேரியில் ஒன்று, கர்நாடகாவில் ஒன்று என ஊர் ஊராக அலைந்து, தனித்தனியாக விண்ணப்பம் போட்டு, நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டியிருந்தது...
வெளிநாட்டு படிப்பு
ஆனால் இப்போது அப்படியில்லை.. இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு தேர்வுதான்... மாநில பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் என்று பல பிரிவுகள் இருக்கும்போது, அனைவரையுமே ஒரே தராசில் வைத்து தகுதியை அளவிட இதுவே சரியான வழி என்று மதிப்பிடுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கும் இந்த மதிப்பெண் உதவுகிறது என்பதே இவர்களின் வாதமாக உள்ளது.
அதேபோல, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நீட் தேர்ச்சி சான்றிதழ் கட்டாய தகுதியாக உள்ளது என்ற பாயிண்ட்டையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
கோச்சிங் சென்டர்கள்
ஆனால், இன்னொருபக்கம் இருக்கும் மக்களின் வேதனையோ ஆழமானது.. அவர்களின் துயரம், எந்த தராசிலும் அளவிட்டு சொல்ல முடியாதது.. "எங்கள் வீட்டுப் பிள்ளை, வருஷம் முழுக்க பள்ளிப்பாடங்களை படித்து நல்ல மதிப்பெண் எடுக்கிறது... ஆனால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கோச்சிங் சென்டர்களுக்கு செல்லும் வசதி படைத்த மாணவர்களால் மட்டுமே நீட்டில் தேர்ச்சி பெற முடிகிறது" என்று கிராமப்புற, ஏழைப் பெற்றோர் சூழலை வெளிப்படுத்துகிறார்கள்..
அதாவது, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பிள்ளைகளின் கனவு, அந்த பயிற்சி மைய வாசலிலேயே கருகிப்போகிறது என்பதே இந்த பெற்றோர்களின் கண்ணீர் குற்றச்சாட்டு.
அதுமட்டுமல்ல, சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு கேட்கப்படும் கேள்விகள், அவர்களுக்கு பெரும் சவாலாக மாறுகின்றன... மேற்கொண்டு நகர முடியாத முட்டுக்கட்டையாகவும் அவை உருவெடுக்கின்றன.. வருடம் முழுவதும் உழைத்த உழைப்பு, அந்த ஒரே நாளில், வெறும் 3 மணி நேரத்தேர்வில் முடிவாகிவிடுவது எந்தவிதத்தில் நியாயம்? என்று எழுப்பும் கேள்விக்கும் இங்கு பதிலே கிடைக்கவில்லை.
உங்கள் கருத்து என்ன மக்களே
அப்படியானால், மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு என்பது தரத்தை உயர்த்தும் ஏணியா? அல்லது ஏழை எளிய மாணவர்களின் கனவை உடைக்கும் தடைக்கல்லா?
ஒரே தேர்வில் தகுதியை அளப்பது சரியா? அல்லது பள்ளி மதிப்பெண்களையும், கிராமப்புற மாணவர்களின் சூழ்நிலையையும் கருத்தில் கொள்வது சரியா?
வாசகர்களே... இந்த விஷயத்தில் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறது? மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு அவசியம்தானா? உங்களின் ஆழமான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்..!
உங்கள் வீட்டில் இருக்கும் மாணவர்களின் அனுபவங்கள் என்ன? அது பற்றின உங்களின் மேலான கருத்துக்களையும் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தயங்காமல் பதிவு செய்யுங்கள்..!


Click it and Unblock the Notifications
