அது வேற வாய்.. இது வேற வாய்.. அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை.. மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக மாநாட்டில் பேசிய அண்ணாமலை, கோடி ரூபாய் காரில் நாங்கள் செல்லவில்லை. 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேனாவை நாங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை, அதிக விலை கொண்ட சட்டை, செருப்பு அணியவில்லை எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் தொடர்பாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், நான் போடும் சட்டை, வேட்டி, கைக்கடிகாரம் மற்றும் கார் எல்லாவற்றையும் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது எனப் பேசியிருக்கிறார்.
அண்ணாமலையே, எதிர்க்கட்சியினரை விமர்சித்துவிட்டு, அதே விமர்சனம் தன்னை நோக்கி வரும்போது பல்டி அடித்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பாக கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நான் கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட ஸ்பெஷல் வாட்ச். ரஃபேல் விமானத்தை தயாரித்த அதே நிறுவனம் மொத்தம் 500 கைக்கடிகாரங்களை தயாரித்தது. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த வாட்ச்சை கட்டி இருக்கிறேன், என் உடம்பில் உயிர் உள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். ஏனென்றால் நான் தேசியவாதி எனத் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி கேள்வி
பல லட்சம் ரூபாய் மதிப்புடைய கைக்கடிகாரம் ஆடு, மாடுகள் மட்டுமே சொத்து எனச் சொல்லும் அண்ணாமலைக்கு எப்படி வந்தது? ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? அவர் வாட்ச் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பி இருந்தார்.

பில் விவரங்களை வெளியிட தயார்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரை அன்று எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பதிவிட்டிருந்தார். மேலும், மே 2021-ல் நான் தமிழக பாஜக தலைவராக ஆவதற்கு முன்பு வாங்கப்பட்ட எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் பில் மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், எனது 10 வருட எனது வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.

என்னிடம் 35 ரூபாய் பேனா இல்லை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த பாஜக மாநாட்டில் அண்ணாமலை பேசியபோது, இந்த காலம் சாமானியர்களின் காலம். கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் நாங்கள் செல்லவில்லை. 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேனாவை நாங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை, அதிக விலை கொண்ட சட்டை, செருப்பு அணியவில்லை, நாங்கள் 200,300 ரூபாய் செருப்புகளைத் தான் அணிகிறோம், உங்கள் ரேஞ்சுக்கு எதிரி வருவான் என நினைக்காதீர்கள், என்னைப் போன்ற ஆடு, மாடு மேய்ப்பவன் தான் உங்களுக்கு சவாலாக இருப்பான் எனப் பேசியிருந்தார்.

சட்டை வேட்டியை ஆய்வு செய்றாங்க
தற்போது எழுந்துள்ள ரஃபேல் வாட்ச் பிரச்சனைக்குப் பின்னர் கோவையில் பேட்டியளித்த அண்ணாமலை, 'நான் அணியும் சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் மற்றும் கார் எல்லாவற்றையும் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது. இதை புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். நான் கட்டி இருக்கும் வாட்ச் ரஃபேல் விமானத்தின் பாகங்களால் தயாரிகப்பட்டது. தேசியவாதி என்பதால் இதனை அணிந்திருக்கிறேன்' எனக் கூறியுள்ளர்.

அது வேற வாய்!
எப்படி ஒரு சாமானியர், ஆடு மாடு மேய்ப்பவர் பல லட்சம் மதிப்புடைய வாட்ச் கட்டியுள்ளார் என்று கேட்டால், தான் அணிந்திருப்பவற்றை ஆய்வு செய்கிறார்கள், நான் தேசியவாதி என்று பல்டி அடிக்கிறார் அண்ணாமலை. அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என "அது வேற வாய்... இது வேற வாய்" என நெட்டிசன்கள் அண்ணாமலையின் பேச்சை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

அன்று.. இன்று..
அன்று : இந்த காலம் சாமானியர்களின் காலம். நாங்கள் கோடி ரூபாய் காரில் செல்லவில்லை. 35 ஆயிரம் ரூபாய் பேனாவை நாங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை, அதிக விலை கொண்ட சட்டை, செருப்பு அணியவில்லை..
இன்று : நான் ஒரு தேசியவாதி.. அதனால் பல லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச் அணிந்திருக்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை மாற்றி மாற்றிப் பேசி இருப்பதை கிண்டல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications