புதிய சட்டம்: நேற்று டிரெய்லர்தான்! இனிதான் மெயின் பிச்சரே இருக்கு.. தீவிரம் காட்ட போலீசார் முடிவு!
சென்னை: சென்னையில் நேற்றே போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு புதிய நடைமுறையின் படி கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. இன்று புதிய அபராத தொகையை விதிக்கும் நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க.. அதிகரிக்க... விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
தீபாவளி கொண்டாட்டம் முடித்த சென்னை திரும்பும் மக்கள்.. தாம்பரம் டூ சென்னை கடும் போக்குவரத்து நெரிசல்

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம்
விபத்துக்கள் நடப்பதற்கு பெரும்பாலும் சாலை விதி மீறல்களே காரணமாக அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது.

1000 ரூபாய் அபராதம்
இதனால், விபத்துக்களை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இதன்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. புதிய விதிகளின் படி, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால்..
இதற்கு முன்பாக ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், சிக்னல் விதிகளை மீறி சென்றால் அபராதம் ரூ. 500, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கினால் ரூ. 5 ஆயிரம் அபராதம், நோ பார்க்கிங் மற்றும் நோ என்ட்ரி பகுதியில் வாகனங்களை ஓட்டினால் ரூ.500 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினால்..
அதேபோல், மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் அது மட்டும் இன்றி பின்னால் இருப்பவர்களுக்கும் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய நடைமுறை நேற்றே அமலுக்கு வந்து விட்டது. இது தெரியாமல் விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் பலரும் நேற்று போக்குவரத்து போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்.

அபராதத்தை பார்த்து தலைசுற்றிப்போன..
குறிப்பாக சென்னையில் முக்கிய இடங்களில் வாகன ஓட்டிகளை மடக்கி மடக்கி போலீசார் பிடித்தனர். விதிக்கப்பட்ட அபராதத்தை பார்த்து வாகன ஓட்டிகள் பலரும் தலை சுற்றிப்போயினர். பல இடங்களில் போக்குவரத்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. நேற்று முதல் நாள் என்பதால் பெரும்பாலும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பல இடங்களில் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

கருணை காட்டக்கூடாது
இந்த நிலையில் இன்று முதல், புதிய அபராத தொகையை விதிக்கும் நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், வாகன ஓட்டிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களிடம் கருணை காட்டாமல் அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று முதல் தீவிரமாக கடைப்பிடிக்க..
இன்று முதல் விதியை மீறினால் அபராதம் விதிக்கும் முறையை தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விதிகளை மீறும் பட்சத்தில் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் சென்றால் மட்டுமே தங்கள் பையில் இருக்கும் பணத்தை காப்பாற்ற முடியும்.