குறவர் சமூகத்தை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும்.. வேல்முருகன் மரணத்திற்கு நீதி கேட்கும் சீமான்!
சென்னை : வேல்முருகன் மரண வழக்கின் விசாரணையின்போது குறவர்குடி மக்களைப் பழங்குடியினராக ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மலைக்குறவர் இனத்தை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர் எனக் கூறி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்நிலையில், வேல்முருகன் மரணத்திற்கு நீதி கேட்டு அறிக்கை விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வேல்முருகனின் மனதில் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் மீது விரக்தியும், அரசின் மீது நம்பிக்கையின்மையும் ஏற்பட்டிருந்தால் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது மிகுந்த மனவேதனை உண்டாகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

பெரும் துயரம்
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இரு பிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துத் தவிக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

வரலாற்றுப் பெரும்பிழை
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மலைப்பகுதியில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பால் தங்கள் வாழ்விடங்களிலிருந்து நாடோடிகளாக விரட்டப்பட்ட மக்கள் மலைக்குறவர்கள். சமூக அடுக்கில் ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள பழங்குடியின மக்களாகிய மலைக்குறவர்கள், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகிய கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டினைப் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குவது சாதி சான்றிதழே ஆகும். ஆனால், தமிழ்ப் பழங்குடியினரான மலைக்குறவர் மக்களை வட மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த அக்கிபிக்கி, நக்கலே உள்ளிட்டவர்களோடு தவறாகச் சேர்த்து பட்டியலினத்தவராக தமிழ்நாடு அரசு அறிவித்தது வரலாற்றுப் பெரும்பிழையாகும்.

கைவிரிப்பதா?
அரசு தங்களைப் பட்டியலினத்தவர் என்று வகைப்படுத்துவதை மாற்றி, பழங்குடியினர் என்று அறிவிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக குறவர்குடி மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் நீட்சியாகவே சகோதரர் வேல்முருகனின் உயிர் அநியாயமாகப் பறிபோன கொடுமையும் அரங்கேறியுள்ளது. ஆனால், அதற்குப் பிறகும் தமிழ்நாடு அரசு சகோதரர் வேல்முருகன் மரண வழக்கின் விசாரணையின்போது தொல்குடி தமிழர்களான குறவர்குடி மக்களைப் பழங்குடியினராக ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இதுதான் சமூக நீதியா?
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொல்குடி தமிழ்மக்கள் உயிரை விட்டாலும் உரிமைபெற முடியாது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் 55 ஆண்டு காலமாக திராவிடம் இந்த மண்ணில் வளர்த்த சமூக நீதியா? பல ஆண்டுகளாகப் போராடியும் குரலற்ற குறவர்குடி மக்களுக்கு அவர்களின் உரிமையான, உண்மையான சாதி சான்றிதழைக் கூடத் தரமறுத்துவிட்டுச் சமத்துவம், சமூக நீதி என்று திராவிடக் கட்சிகள் பேசுவது வெட்கக்கேடானது. சகோதரர் வேல்முருகனின் மனதில் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் மீது விரக்தியும், அரசின் மீது நம்பிக்கையின்மையும் ஏற்பட்டிருந்தால் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது மிகுந்த மனவேதனை உண்டாகிறது. இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ஒருவேளை இப்படி செய்திருந்தால்
முதல்வர், பழங்குடியினர் ஒருவரின் வீட்டிற்கு நேரில் செல்வது, அங்கே உணவு உண்பது என செய்தி அரசியல் செய்து, அதன் மூலம் ஒட்டுமொத்த பழங்குடியினர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிட்டதுபோல விளம்பரம் தேடிய திமுக அரசின் ஏமாற்று நாடகம், பின்னாட்களில் முதல்வர் வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அம்மக்களே வேதனையுடன் கூறியபோது வெளிச்சத்திற்கு வந்தன. ஒருவேளை சகோதரர் வேல்முருகன் பற்றியும் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டிருந்தால் விளம்பரத்திற்காகவாவது முதல்வர், அவரின் வீட்டிற்கு சென்று சாதி சான்றிதழ் கொடுப்பதாக உறுதியளித்திருப்பார். அப்படியான வாய்ப்பும் இல்லாத நிலையில் இன்றைக்கு அநியாயமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

அரசு வேலை + 50 லட்சம் நிதி
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி, 'தொல்தமிழர்களான குறவர்குடி மக்கள் பழங்குடியினரே' என்ற வரலாற்றுப் பேருண்மையை ஏற்பதாக அறிவிப்பதோடு, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து புதிய அரசாணையும் வெளியிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்க்குறவர்குடி மக்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் விரைந்து பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். உயிரிழந்த சகோதரர் வேல்முருகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதோடு, அவரது இரு பிள்ளைகளின் முழுமையான கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டுமெனவும், துயர் துடைப்பு நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications