பொங்கல் பரிசு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5000! கோடு போட்ட ஓபிஎஸ்.. ரோடே போடும் ஜிகே வாசன்!
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ஆயிரம் ரூபாய் பணமாக வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் குடும்பத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமாக ஜிகே வாசனும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.

பொங்கல் பரிசு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

குற்றச்சாட்டு
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தாண்டு ரொக்கமாக வழங்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் குடும்பத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமாக ஜிகே வாசனும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி - சேலை வழங்குவது பொங்கல் தொகுப்பு வழங்குவது ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற நடைமுறையாகும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க வேண்டும் என வலியுறித்தியுள்ளார்.

ஜிகே வாசன்
ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த மாதம் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு வருடந்தோறும் வழங்க கூடிய பொங்கல் தொகுப்பை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இவற்றிற்கான பொருள்களை விவசாயிகளிடம் இருந்து கரும்பு மற்றும் வெல்லம், பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெரும் வகையில் ஐந்தாயிரம் மதிப்புள்ள தரமான பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும். அதோடு மக்களை நேரடியாக பாதிக்கும் நெய் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications